வீடு தேடுதல் (1)

Published by: 9

ஏதோ ஒரு காரணத்துக்காக வீடு மாத்தனும்னு முடிவு பண்ணிருவோம். அடுத்து வீடு தேடனும். எப்படியெல்லாம் தேடலாம்? பேப்பர் விளம்பரம், இணையம், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தல் மற்றும் புரோக்கர்கள்.

வழக்கமான பேப்பர்களில் வாடகை வீடு பற்றிய விளம்பரம் குறைவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளுக்கு ஃப்ரீ ஆட்ஸ்தான்(Free Ads) சரி. சென்னையில் வியாழன்தோறும் கடைகளில் கிடைக்கும். இப்போது இங்கும் புரோக்கர்கள் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். விளம்பரம் பார்த்து போன் செய்தால் பத்துக்கு எட்டு புரோக்கர்கள் கொடுத்த விளம்பரமாகத்தான் இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா? புரோக்கர் மூலம் வரும் பிரச்சனைகள் அடுத்து பார்க்கலாம். முடிந்தவரை வீட்டு உரிமையாளர் கொடுத்த விளம்பரமாகப் பார்த்து போன் செய்யவேண்டும், விளம்பரத்திலேயே போட்டிருக்கும் புரோக்கர்கள் வேண்டாமென்று.

முதலில் நமக்கு தேவையான ஏரியாவில் வந்திருக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் அலச வேண்டும். ஏதாவது விளம்பரம் நமக்குத் தோதாக இருக்கும்பட்சத்தில் அதை பேனா கொண்டு வட்டமிட்டுக்கொண்டே வரவேண்டும். தேர்ந்தெடுத்தல் முடிந்த பின் ஒவ்வொருவருக்காக போன் செய்ய வேண்டும். பேசும்போது நமது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, அவர் கொடுத்த விளம்பரம் பற்றிச் சொல்லிப் பேச ஆரம்பிப்பது நல்லது. சிலர் பல இடங்களில் விளம்பரம் கொடுத்திருப்பர். சிலர் வீட்டு போன் நம்பரைக் கொடுத்திருப்பார்கள், வீட்டில் விளம்பரம் கொடுத்ததே தெரியாத மனைவியோ (அல்லது கணவனோ) போன் எடுத்தால், தலையும் புரியாமல் காலும் புரியாமல் ஒரு கால் வீணாகும் வாய்ப்பு உள்ளது.

சரியான புரிதலுக்குப் பின் வீட்டைப் பற்றிப் பேச ஆரம்க்கலாம். வீடு காலியாக இருக்கும்பட்சத்தில் நமது தேவைகள் அனைத்தையும் சொல்லி அதற்கேற்றார்போல வீடு இருக்கிறதா என உறுதி செய்துகொண்டு பின் நேரில் சென்று பார்க்க நேரம் கேட்கவேண்டும். சில நேரம் போனிலேயே தெரிந்துவிடும் நமக்கு இந்த வீடு ஒத்துவராது என்று. உதாரணத்திற்கு, பார்க்கிங் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீட்டிற்கு வெளியே தெருவில்தான் விடவேண்டியது இருக்கும். தண்ணி வசதி பற்றி கேட்டால், காலை மாலை வரும் என்று பதில் வரும். போய்ப் பார்த்தால் வீடு இரண்டாம் தளத்திலும் தண்ணீர் குழாய் முதல் தளத்திலும் இருக்கும். தண்ணீர் காலை 5 மணிக்கு வரும். ஆகவே எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்கவேண்டும்.

தேவைகள் சரியாக இருந்தால் நேரில் சென்று பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஒத்துவரவில்லையென்றால் வட்டம் போடு வைத்திருப்பதை அடித்து வைத்துக்கொள்ளவேண்டும். திரும்பத் திரும்ப ஒரே ஆளுக்கு போன் செய்வதைத் தவிர்க்கலாம். ஒரே விளம்பரம் வாரா வாரம் வரும். அதையும் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் முதலிலேயே சொல்லி விடுவார்கள், காலி இல்லை என்று. அப்போதும் அடித்துக்கொள்ளவேண்டும். நல்ல வீடு உடனேயே போய்விடும், அதற்கு எனது நண்பர்கள் போன்ற ஆட்கள்தான் காரணம்.

எனது நண்பர் ஒருவர் வீடு தேடும் அனுபவம் பற்றி சொன்னார். வியாழன் காலை 6 மணிக்கு பேப்பருடன் அந்த ஏரியாவுக்குச் சென்றுவிடுவார். இந்த மாதிரி ஓனர் கொடுத்த விளம்பரங்களுக்கு ஒவ்வொன்றாகப் போன் செய்து அப்போதே வந்து பார்க்க நேரம் கேட்பார். காலை என்பதால் எப்படியும் கிடைத்துவிடும். பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதும் காலை அலுவலகம் செல்லுவதற்கு முந்தைய நேரத்தைத்தான். சரியாக அமைந்துவிட்டால் அப்போதே முன்பணம் கொடுத்து வந்துவிடுவார். விளம்பரம் வந்த சூட்டோடு சூடாக வீடுகள் நிரம்பும் சூட்சுமம் இதுதான். அவரது நண்பர்களுக்கும் இப்படித்தான் பிடித்துக்கொடுக்கிறாராம். பின்பு நமக்கு எப்படி கிடைக்கும்?

இப்போது சில இணைய தளங்களும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றன. 99acres.com, indiaproperties.com, magicbricks.com, makaan.com, sulekha.com போன்றவை பயனளிக்கும் தளங்கள். இங்கும் புரோக்கர், ஓனர் விளம்பரங்கள் என்று தனித்தனியாக இருக்கும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து வாய்வழி விளம்பரம். நமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கலாம். அப்படியே வாய்வழியாகவே பரவி வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல வீடுகள் கிடைக்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நல்ல அபார்ட்மெண்டுகளில் பக்கத்துவீடு காலியாவது தெரிந்தால் மற்ற பக்கத்துவீட்டுக்காரர்கள் தமக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, அந்த வீடு காலியாவதற்கு முன்பே பேசி முடித்துவிடுவார்கள். வீடு காலியாவதற்கு முன்னமே அது அடுத்தவர் வருவதற்கு ஏற்பாடாகிவிடும். அதனால் நண்பர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள் அனைவரிடம் சொல்வதால் ஒன்றும் குறைந்துபோய்விடாது. முடிந்தால் புலம்பலாம், அது பார்த்து நமது நண்பர்கள் கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்து வீடு கிடைக்க ஏற்பாடு செய்யலாம். வலைப்பூ இருந்தால் அங்கு விளம்பரமாகப் போடலாம். பதிவர்கள் யாரும் பார்த்து உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

-பெஸ்கி.

புரோக்கர் – இந்தப் புண்ணியவான் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். மேலும், பின்வரும் விசயங்கள் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் சொல்லலாம் என்றிருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் வைத்து மேலும் ஏதாவது சேர்க்கவேண்டுமா எனத் தெரியப்படுத்தவும்.

புரோக்கர் பிரச்சனைகள்
தெரு - பார்க்கிங்
தண்ணீர்
இணைப்புகள்
கடை வசதிகள்
அக்கம்பக்கம்
வீட்டின் தன்மை
வசதிகள் - துணி உலர்த்த, பார்க்கிங், ஏசி, மீட்டர், ஜன்னல், சமையலறை ஜன்னல், ஆணிகள், குளியலறை வசதிகள்
வீட்டு ஓனர்
முகவரி மாற்றங்கள்
வீட்டில் தேவையில்லாமல் சேரும் பொருட்கள்
Thank you for reading. 🙂

9 comments

  1. தேவன் மாயம்

    விளம்பரம் வந்த சூட்டோடு சூடாக வீடுகள் நிரம்பும் சூட்சுமம் இதுதான். அவரது நண்பர்களுக்கும் இப்படித்தான் பிடித்துக்கொடுக்கிறாராம். பின்பு நமக்கு எப்படி கிடைக்கும்?//

    நல்ல யோசனை!

  2. அமைதி அப்பா

    //உங்கள் அனுபவங்கள் வைத்து மேலும் ஏதாவது சேர்க்கவேண்டுமா எனத் தெரியப்படுத்தவும்.//

    எதுவும் விடுபட்டதாக
    தெரியவில்லை.

    நிச்சயம் இது பெரிய அளவில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பதிவாகவே உள்ளது. புரோக்கர் பற்றியப் பகுதி சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

  3. Beski

    நன்றி தேவன் மாயம். ஆராய்ச்சி எல்லாம் இல்லை, அனுபவம்தான்.

    நன்றி அமைதி அப்பா,
    மற்றவர்களுக்கு உதவிகரமாய் இருந்தால் மகிழ்ச்சி.

    நன்றி அன்பரசன்.

    நன்றி ஆதவா,
    இதெல்லாம் க.மு. அனுபவம் மாப்பி.

Leave a Reply