மதுரை அனுபவங்கள்

Published by: 4

madurai-vaigai-morning.jpg

சென்ற வாரம் மதுரைக்குச் சென்றிருந்தேன். பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. முன்பு, 2006ல் ஒரு ஆறு மாதங்கள் அண்ணாநகரில் இருக்கும் சுகுணா ஸ்டாப்புக்கு அருகில் தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடாக இருந்தாலும், அங்கிருந்த நாட்கள் சுக அனுபவமாக இருந்தது. அவ்வளவு அருமையான ஓட்டல் சாப்பாடு, சென்னை வந்த பிறகுதான் தெரிகிறது. இப்போது ஆரப்பாளையம் அருகே உள்ள, தங்கமணியின் அண்ணன் ஒருவருடைய கல்யாணம். அவர் உறவினர்கள் வீட்டில் தங்கச் சென்றுவிட்டார், எனக்கு அவர்களிடத்தில் அவ்வளவு பழக்கம் இல்லாததால் ஆரப்பாளையம் அருகிலிருக்கும் லாட்ஜ் ஒன்றில் தங்கினேன்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்தது அந்த சிவபாக்யா லாட்ஜ். அந்த சுற்று வட்டாரத்தில் அது ஒன்றுதான் இருக்கிறது போல! மிக மிக அதிக விலை, மிகச் சிறிய அறைகள். சுத்தம், கேட்டால் கூடக் கிடைக்கவில்லை. மதுரை மக்கள் ரொம்ப நல்லவர்கள் என்று எல்லோரிடமும் சொல்வேன், அங்கேதான் இதுபோன்ற வியாபாரிகளும் இருக்கிறார்கள். ரூம் சர்வீஸ் பரவாயில்லை. அவ்வப்போது எதுவும் வேண்டுமா என அவர்களே வந்து வந்து கேட்டுக்கொள்கிறார்கள். எது சொன்னாலும் உடனுக்குடன் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

அடுத்து மதுரை ரோடு. பாதாளச் சாக்கடைக்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள். இதில் அதிக மழை வேறு. எங்கும் சகதி, குண்டு, குழி. நடக்கவும் சிரமம், வண்டியில் போகவும் சிரமம். ஆனால் எங்கும் போக்குவரத்து நெரிசல் இல்லவே இல்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்பும் அதே டிராபிக் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. மதுரை வளரவே இல்லையா? வரும்போது கோரிப்பாளையம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் நெரிசல். ஆரப்பாளையம் பக்கம் அவ்வளவாக இல்லை. பல இடங்களில் சிக்னல் எரியவே இல்லை. ஆனாலும் முட்டல் முனகல் இல்லாமல் மக்கள் சென்றார்கள். சென்னையைப் போல வலதுபுறம் ஏறிச் சென்று எதிரே வருபவரையும் மறித்து யாரையும் போக விடாமல் செய்யும் போக்கு இங்கு இல்லை.

அடுத்து சரக்கு. மதுரையில் ஒரு கடையில் கூட ஒரிஜினல் சரக்கு இல்லை போலிருக்கிறது. பீர் எல்லாமே டூப்ளிகேட். ஏதோ புளித்தண்ணீரைக் குடித்தது போல இருக்கிறது. இதற்கு சென்னை டூப்ளிகேட் சரக்கு எவ்வளவோ பரவாயில்லை, குடிக்கும் அளவுக்காவது இருக்கும். இங்கு மிகவும் மோசம், வேறு ஏதேனும் தொழிற்சாலை உற்பத்தி போலிருக்கிறது. இன்னொரு முக்கியமான விசயம். ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார்கள் கண்டு அசந்துவிட்டேன். அவ்வளவு சுத்தம். லாட்ஜில் இருந்த அறையை விட இங்கு சுத்தம் அதிகம் என்றால் பாருங்கள். ஏசி பார் அருமை. உள்ளே புகை பிடிக்கக் கூடாது. அதற்காக, ஏசி அறை கதவுக்கு வெளியே, வரிசையாக நாற்காலிகளும், ஒவ்வொன்றிற்கும் முன்னால் ஒரு ஸ்டூலும் போடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோரு ஸ்டூலிலும் ஒரு ஆஷ் ட்ரே, ஏசி அறையிலிருந்து வந்து அமர்ந்து அடிப்பதற்காக. அருமை அருமை. நல்ல கவனிப்பு, சரக்கைத் தவிர அனைத்தும் அருமை.

குரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியிலிருந்து பார்க்க பழைய தியேட்டர் போலிருந்தது. நார்நியா 3டியில், டிக்கட் விலை 80, 100 என்றார்கள். சென்னை கமலா தியேட்டரில் கூட இந்த அளவு விலை இல்லை. இங்கு தாறுமாறாக இருப்பது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் டிக்கட் கொடுக்கும் கருவியெல்லாம் நன்றாக இருந்தது, அதிலிருந்து வந்த டிக்கட்டும் சதயம், கமலா டிக்கட் போன்ற தாளில், அதே போல, அட, சீட் நம்பர் கூட இருந்தது. அதையெல்லாம் யார் கண்டுகொள்ளப் போகிறார் என்று உள்ளே சென்றால் ஆச்சர்யம். அருமையான அரங்க சீரமைப்பு. சிறப்பான சீட்கள், சீட்டில் இருக்கும் எண் முறைப்படி அமரவைக்கப்படுகிறார்கள். அருமையான ஏசி. சென்று உட்கார்ந்தவுடன் மெனுவுடன் நம்மை அனுகும் வாலிபர்கள். ஆர்டர் செய்தால் நமது சீட்டுக்கே சாப்ப்பிடும் பொருட்கள் வந்து சேரும். சென்னையை விடக் கூடுதலான வசதியாகத் தெரிந்தது எனக்கு இது. டிஜிட்டல் அது இது என்று படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரே விளம்பரம். பரவாயில்லை, நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அரங்கின் நீளம் அதிகமாக இருந்ததால் படம்தான் மிக மிகச் சிறியதாகத் தெரிந்ததாகத் தோன்றியது. குரு திரையரங்கம் இப்போது சென்னை திரையரங்குகள் தரத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

மதுரையில் நான் கண்ட மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த விசயம், கண்வலி. பாதிப்பேர் கண்கள் ரத்தச் சிவப்பாக இருக்கின்றன, ரத்தசரித்திரம் பட விளம்பரத்திற்காக யாரோ செய்த சதியோ எனத் தோன்றியது, அல்லது அனைவரும் அதைப் பார்த்திருக்கலாம். பயந்து ஒதுங்கினால் சாதாரணமாகச் சொல்கிறார்கள், “அதெல்லாம் சரியாப்போச்சு, கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும், பயப்படாதீங்க”.

மதுரையிலிருந்து சிவகாசி சென்றேன் பேருந்தில். அது ஒரு தனியார் பேருந்து. ஏறி, மூன்று பேர் இருக்கும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். இன்னொரு புறம் ஒருவர் வந்து அமர்ந்தார். கண்ணில் ஒரு கூலிங்கிலாஸ். அப்போதே உசாராயிருக்கவேண்டும். ஓரளவு பேருந்து நிறைந்துகொண்டிருந்தது. எங்களது இருக்கைக்கு ஒருவர் வந்து, ஓரத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்க”
ஓரத்திலிருந்தவர் கண்ணாடியைக் கழற்றி,
“கண்ணுவலி எனக்கு, வேற இடத்துக ஒக்காந்துக்குறிங்களா”
“எனக்கும் கண்ணுவலிதான், பராவால்ல தள்ளுங்க”
நான்,
“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”.

மதுரையில் திருமணத்தைப் பதிவு செய்யவென இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன். வேலை நடக்கவே இல்லை. அதைப் பற்றிய தனி சிறப்புப் பதிவு அடுத்து வரும்.

குறிப்பு: முன்பு போல படங்களுடன் எழுத முடியவில்லை. சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதையாவது வித்தியாசமாகப் பார்த்து, படம் எடுக்க மொபைலை எடுத்தாலே நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார் தங்கமணி. அதனால் மதுரையில் எடுத்த ஏதோ சில படங்களி இணைத்துள்ளேன்.
படம் எடுக்க முடியவில்லையே என மிகவும் வருந்திய விசயம். தலதளபதி போல “கேப்டனின் விஜய்” என்ற டீக்கடை பெயர்ப் பலகை.

-பெஸ்கி.

Thank you for reading. 🙂

4 comments

Leave a Reply