புதுத்தகம்

Published by: 13

கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை.

புத்தகக் கடை என்றதும் சென்னையிலிருப்பது போல இலக்கியவாதிகள் வந்துபோகும் புத்தகக் கடை என்று நினைத்துவிட வேண்டாம். எங்களது ஊரில் புத்தகக் கடை என்றால் பள்ளிக் குழந்தைகளுக்கான நோட்டுகள், புத்தகங்கள் கிடைக்கும் கடை. பள்ளி ஆரம்பித்தவுடன் நோட்டுகளின் விறபனை சூடு பறக்கும். நோட்டுகளுடன் பேனா, பென்சில், டப்பா இன்ன பிற துணை ஆயுதங்களும் கிடைக்கும். பாடப் புத்தகம்தான் அதிக கிராக்கியாக இருக்கும்.

அப்போதெல்லாம் பாடப் புத்தகங்கள் பள்ளி ஆரம்பித்தவுடன் கடைகளில் கிடைக்காது. சிறிது நாட்கள் கழித்துதான் வரும். அதுவரை கடந்த வருட பழைய புத்தகத்தை வாங்கி வைத்து காலம் செல்லும். சிலருக்குத்தான் கிழியாத புத்தகம் கிடைக்கும். சில வீட்டில் அண்ணனோ அக்காவோ இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் மூத்தவர் இல்லாத வீடுகளில் இருப்பவர்களோ, இளையவர்கள் இல்லாத ஆட்களாகப் பார்த்து கொக்கி போடவேண்டியதிருக்கும். சிலர் விலைக்குக் கூட கொடுப்பர். சிலரோ ஓசிக்கே கொடுத்துவிடுவர். பெரும்பாலும் அது கிழிந்த புத்தகமாகவே இருக்கும். கிழிந்த புத்தகமென்றால் அட்டையில்லாத புத்தகம்.

பழைய புத்தகம் வாங்குவதில் இரண்டு வகை உண்டு. சிலர், புது புத்தகம் வாங்குவது வரை ஒப்பேத்த பழைய புத்தகத்தை உபயோகிப்பர். அவர்கள் பெரும்பாலும் கிழிந்த புத்தகத்தையே வைத்திருப்பர். மற்றவர்கள் நல்ல பழைய புத்தகத்தை ஒரு விலை கொடுத்து வாங்கி விடுவர். அவர்களுக்கு புது புத்தகம் வாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களது வீட்டு பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது. அரசு தரும் இலவசப் புத்தகம் கிடைக்கும்தான். ஆனால் அது எத்தனை மாதங்கள் கழித்து வருமென்பது யாருக்கும் தெரியாது.

இப்படி பள்ளி ஆரம்பித்த சில நாட்களாகப் புத்தகம் வாங்கும் வேட்டை நடந்துகொண்டிருக்கும். புது புத்தகம் வாங்கும் நபர்களோ கதிரவன் ஸ்டோருக்கு புத்தகம் வந்ததா என்பது குறித்து விசாரணையிலேயே இருப்பர். ”நேற்று ஐந்தாம் வகுப்பு தமிழ் புத்தகம் வந்துவிட்டதாம் தெரியுமா?”, என்பது போன்ற ஆச்சர்யமிக்க அவரச் செய்திகள் காற்றில் பறந்துகொண்டிருக்கும். ஆம், ஒரு வகுப்பிற்கான புத்தகங்கள் மொத்தமாக வராது. தவணை முறையில்தான் வரும். ஒரு பாடமோ, அதற்கு மேற்பட்ட பாடங்களோதான் ஒரு சமயத்தில் வரும். மொத்தமாக வந்ததாய் சரித்திரம் கிடையாது.

சிலருடைய பெற்றோர் வெளியூரில் வேலை செய்துகொண்டிருப்பர். அவர்கள் அருகிலுள்ள பெரிய ஊர்களில் இருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சீக்கிரம் புது புத்தகங்கள் கைகளில் தவழ வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு அந்த சமயத்தில் நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுடைய கைகளிலும் சில நாட்களில் புது புத்தகம். அந்த சில பேரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், படம் பார்க்க. மற்றவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிட்டால் அதன் பிறகு அவர்களைச் சீண்ட ஆள் இருக்காது.

இதாவது பரவாயில்லை. சில நேரங்களில் பாடத்திட்டம் மாறி, முந்தைய வருடத்திலிருந்து முழுவதும் வேறான புத்தகத்தை அரசு வெளியிடும். அபோதுதான் நமக்குக் கொண்டாட்டமே. புத்தகம் வாங்கியாச்சா என்ற ஆசிரியரின் நச்சரிப்பு அவ்வளவாக இருக்காது. அவருக்கு மட்டும் எங்கிருந்தாவது ஒரு புத்தகம் கிடைத்திருக்கும். அது எங்காவது தூரத்திலிருக்கும் உறவினர் மூலமோ நண்பர் மூலமோ கிடைத்திருக்கலாம். மீண்டும் ஒரு நாள் கதிரவன் ஸ்டோருக்கு புது புத்தகம் வந்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீ போல பரவும். உடனே அப்பாவை அழைத்துக்கொண்டு கடைக்கு படையெடுப்புகள் தொடங்கும். காலியாவதற்குள் வாங்கவேண்டுமே!

இப்படியெல்லாம் வாங்கிய புத்தகங்களை இப்போது தேடவேண்டுமென்கிறது மனது. ’ஈறு போதல், இடை உகரம் ஈயாதல்’, ‘இரட்டைக்கிளவி’, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’, ‘பண்புத்தொகை’, ‘நேர் நேர் தேமா’ போன்றவை இலக்கணப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது கேட்கும். சரி, இலக்கணம் பற்றி எழுதலாமென்றால், அந்த புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது அவற்றைத் தேடி எடுத்துவரவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போது நண்பனிடமிருந்து வந்தது மின்னஞ்சல் ஒன்று, தமிழ்நாடு அரசுப் பாடநூலகள் இணையத்தில் இருக்கிறது, டவுன்லோடு செய்து பிரிண்ட் பண்ணி ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்று (அல்லது இந்த மின்னஞ்சல் வந்த பின் இவையனைத்தும் மனதில் ஓடின எனவும் கொள்ளலாம்). முடிந்தவர்கள் செய்யலாம், இங்கே (textbooksonline.tn.nic.in) சென்று பார்க்கவும். முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்துப் புத்தகங்களும் PDF வடிவில் இருக்கின்றன. தமிழ் இலக்கணம், செய்யுளும் இங்கே இருக்கிறது, அருஞ்சொற்பொருள் விளக்கத்துடன். செய்யுள் பகுதிகளை அசைபோட நினைப்பவர்கள் சென்று பார்க்கலாம். இலக்கணமும் இருக்கிறது. ஆனால் நாம் எதிர்பார்த்த பகுதி இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் பாடத்திட்டம் அனைத்தும் மாறி இருக்குமே.

பெஸ்கியின் டிஸ்கி: இனி இலக்கணம் பற்றிய பதிவுகள் வரலாம்.

(பதிவிற்கு சம்பந்தமில்லாத)பெஸ்கியின் டிஸ்கி: ஆணி அதிகம்; ஆதலால் பதிவு உலா குறைவாகத்தான் இருக்கும்.

-அதி பிரதாபன்.

Thank you for reading. 🙂

13 comments

  1. முத்துலெட்சுமி/muthuletchumi

    good post.. சின்ன வயசில் புத்தகம் வாங்க காசு இல்லாத ஒரு சமயம் எங்கம்மா வந்து டீச்சரிடம் இரண்டு வாரம் மன்னிக்கும் படிகேட்டுகிட்டாங்க . அதுவரை எழுதியே
    படிச்சேன் அது நினைவுக்கு வந்துடுச்சு.. 🙂

  2. நான் ஒரு முட்டாள்!!!

    ஒரு கெட்ட செய்தி…
    ~~~~~~~~~~~~~~~~~~~
    பெஸ்கியின் டிஸ்கி: இனி இலக்கணம் பற்றிய பதிவுகள் வரலாம்.

    ஒரு மிக மிக மிக நல்ல செய்தி !!!
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    (பதிவிற்கு சம்பந்தமில்லாத)பெஸ்கியின் டிஸ்கி: ஆணி அதிகம்; ஆதலால் பதிவு உலா குறைவாகத்தான் இருக்கும்.

  3. தினேஷ் ராம்

    'ஃபெயில்' ஆகி விடுவோம் என்கிற பயத்தில்.. புத்தகத்தை பாதுகாத்து, பின்னர் 'பாஸ்' ஆன செய்தி கிடைத்தவுடன் வீடு தேடி வந்து புத்தகத்தை கொடுத்துட்டு போற சில நல்ல அண்ணன்கள் உண்டு. அந்த அண்ணன்களை பற்றி விட்டுட்டீங்களே அண்ணா நீங்க. 🙂

  4. அகநாழிகை

    அதிபிரதாபன்,
    நல்ல பதிவு. அழகான விவரணையோடு எந்த தற்புகழ்ச்சிக்கும் இடம் கொடுக்காமல் நன்றாக எழுதியிருக்கிறாய். வாழ்த்துக்கள்.

    – பொன்.வாசுதேவன்

  5. மணிஜி

    /(பதிவிற்கு சம்பந்தமில்லாத)பெஸ்கியின் டிஸ்கி: ஆணி அதிகம்; ஆதலால் பதிவு உலா குறைவாகத்தான் இருக்கும்.//

    ரொம்ப சந்தோஷம்….

  6. Unknown

    புது புத்தகத்தின் அலாதி வாசனையாக இருக்கு மலர்ந்த புத்தக ஞாபகங்கள்!
    சிறுவயதுகளில் பாடப் புத்தகங்கள் ஒரு தனி அத்தியாயம் தான்.

    எனக்குப் பாட புத்தகம் என்றால் நினைவுக்கு வருவது, 8ம் வகுப்பு படிக்கும் போது முன் ​பெஞ்சில் இருந்து சித்ராவுக்கு I Lo…. என்று எழுதி காட்டியதுதான். 3 எழுத்துக்களைப் பார்த்ததும் அவள் அவசர அவசரமாக ​பெஞ்சை விரல்களால் தட்டி மேற்கொண்டு எழுதப்பணித்தாள்.. நானும் முழுசாக I love you எழுதிக் காண்பித்தேன் – ரகசியமாய்! ஆனா பாருங்க அது என் புக் இல்ல – ப்ரண்டோடது!

    இன்னொரு அனுபவமும் ப்ளீஸ் மாப்பு..

    அதே 8ங்கிளாஸ்.. முன்னாடி பெஞ்ச்ல ஸ்கூல் தேவதை சித்ரா.. அப்போது பாடம் எடுத்த தலைமையாசிரியர்.. "சோறு தின்னும் வாழ்வே சுகம்" என்று போர்டில் எழுதிவிட்டு.. இதை கடைசி வரியாக்கி ஒரு வெண்பா எழுதுங்க பாப்போம் என்றார்.

    மொத்த வகுப்பும் கல்லறை அமைதி!
    எனக்கு சும்மாயிருக்க முடியவில்லை..

    இலக்கண புத்தகத்தின் ​ஒரு சிறு வெண்பகுதியில் எழுதினேன்​வெண்பா (வெண்பா மாதிரி!!) இப்படி:
    பேறுபெற நினைத்து பெரும் பொய் ​பேசி /
    ஊறுபல செய்து உண்மை மறைத்து /
    நாறும் சாக்கடையில் வீழ்வதினும் – பிச்சைச் /
    சோறு தின்னும் வாழ்வே சுகம்!
    என்று.
    வெண்பாவை (மாதிரிதான் சொற்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் பாக்காதீங்க) படித்துக் காட்டியிருந்தால் த.ஆ பாராட்டியிருப்பார்தான்.. ஆனால் பாடப் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் பார்த்திருந்தால் என் புறமுதுகில் புறநானூறு தீட்டியிருப்பார்.
    ஆகவே அமைதியாய் பொத்திக் ​கொண்டு புதைத்துவிட்டேன் – என் வாழ்வின் முதல் வெண்பாவை.

    சித்ரா இதைப் பார்த்துவிட்டாள் (பின்னால் நடப்பது, நான் எழுதுவது முதற்​கொண்டு பயங்கரமாக அப்ஸர்வ் ​செய்யும் அவளின் ஓரவிழியின் ஓரங்கம் இன்னும் நினைவிலிருக்கு!)
    படித்துக்காட்டு என்று ஜாடை கூட செய்தது அந்த பெண்பா. நான் கம்மென்றிருந்தேன். அப்போது அவள் தன் தலையில் ​மென்மையாக அடித்துக் கொண்டது கவிதையாக இருந்தது!

    டிஸ்கி:

    பின்னூ போட வந்து.. அப்படியே உற்சாகத்தில இப்படி ஆயிப்​போச்சு மாப்ள!
    வேணா நம்ம காலடியில இதை இடுகையாக்கிறலாமா? ஏன்னா இப்ப இந்த பின்னூவோட காப்பிரைட் உங்களுது!

  7. Beski

    நன்றி முத்துலெட்சுமி.
    //சின்ன வயசில் புத்தகம் வாங்க காசு இல்லாத ஒரு சமயம் எங்கம்மா வந்து டீச்சரிடம் இரண்டு வாரம் மன்னிக்கும் படிகேட்டுகிட்டாங்க //
    அதனாலதான் சிலபஸ் மாத்தினா சந்தோசமா இருக்கும்னு சொன்னேன்… நீங்க அதற்கான காரணத்தச் சொல்லிட்டீங்க. இதுக்காக லீவு போட்ட மேட்டர் எல்லாம் இருக்கு. கதிரவன் ஸ்டோருக்கு புத்தகம் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டே இருப்போம்.

  8. Beski

    நன்றி முட்டாள்.
    முதலில் பெயரை மாற்றவும். பொருத்தமில்லாமல் இருக்கிறது.

    நன்றி சாம்ராஜ் ப்ரியன்.
    சூப்பர் மேட்டர்பா. இதுவும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்கள். விட்டுவிட்டேன். பகிர்ந்ததற்கு நன்றி.

    நன்றி அகநாழிகை.
    எல்லாம் உங்க ஊக்கம்தான்.

  9. Beski

    நன்றி தண்டோரா…
    அவ்ளோ டெர்ரராவா இருக்கு?

    நன்றி ராஜூ,
    ரைட்டு, உங்களுக்காகவே எழுத ஆரம்பிச்சிடுறேன்.

    நன்றி ஆதவா.

    நன்றி ஜெ மாம்ஸ்,
    வந்து படிக்கிறேன்.

  10. ஷங்கி

    சிறு வயது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே! புது புத்தகம்,நோட்டு, மணம்… பாளை தெற்கு பஜார், புத்தகக் கடைகள்…
    கால மாற்றத்தில் இணையத்திலேயே கிடைக்கிறதா?!, நல்லாருக்கு நினைவுகள்!

Leave a Reply