சென்னை வர்தா புயல்

Published by: 0

Chennai Cyclone Tree

நாள்: 12-டிசம்பர்-2016

புயல் வலுவாக இருக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது, 100km/h வேகத்தில் காற்று அடிக்குமாம். இதற்கு முன்பே புயலைப் பார்த்ததில்லை, எனவே இதன் வீரியம் புரியவில்லை. வழக்கம்போல திங்கள் கிழமை அலுவகம் சென்றாயிற்று. கிளம்பும் முன்னே, அலுவல மெயிலைப் பார்த்தேன், விடுமுறை இல்லை என்ற அறிவிப்பே இருந்தது. வந்தபின்தான், விடுமுறை அறிவிப்பு வந்தது. திரும்பவா முடியும்? மழை விட்டவுடன் செல்லலாம் என்று இருந்துவிட்டேன்.

சிரமப்பட்டுத்தான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். என்னுடன் சிலர் இருந்தனர், அலுவலகத்தில். காற்று கொஞ்சம் பலமாகத்தான் அடித்தது, சாரல் வேறு.  வெளியே சென்று, அதை அனுபவித்தோம், ஒரு காப்பியுடன். பின்பு உள்ளே வந்து கண்ணாடி சன்னல் வழியே அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தோம். நேரம் செல்லச் செல்ல, காற்று மற்றும் மழையின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது.

புயல் உச்சம் பெற்றது. வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு உக்கிரமான புயலைப் பார்க்கிறேன். 9 வது மாடியின், கண்ணாடி சன்னல் வழியே தெளிவாகத் தெரிந்தது. பயங்கர வேகத்தில் காற்று, அதனுடன் அனைத்து மழை நீரையும் இழுத்துக்கொண்டு செல்கிறது. அந்த நீர், தரையில் விழாது என்றுதான் தோன்றியது, அவ்வளவு வேகமாக இழுத்துக்கொண்டு சென்றது. பக்கத்து கட்டிடத்தைப் பார்க்கிறேன். காற்று அடித்து மேல் நோக்கிச் செல்கிறது, நீருடன். அதைப் பார்க்க, ஒரு அருவி, கீழிருந்து மேல் நோக்கிச் செல்வதைப் போல இருந்தது. கண்ணாடி சன்னல் நொருங்கிவிடும் என்று பயமாக இருந்தது. ஒரு சில இடுக்குகள் வழியே தண்ணீர் சீறிப்பாய்ந்து அலுவகத்தினுள்ளே வந்துகொண்டிருந்தது. செய்வதறியாது பார்த்துகொண்டிருந்தோம்.

Chennai Cyclone Tree

சிறிது நேரத்தில் அந்த உக்கிரம் குறைந்தது. குறைந்தது என்றால் வெளியே சென்றுவிடலாம் என்றில்லை, நம்மால் நடக்கவே முடியாது, சிலர் நடக்க முயற்சித்து, தோற்றுப்போவதைப் பார்த்தோம். ஆனால், பயம் குறைந்துவிட்டது, எப்படி வீட்டிற்குச் செல்வது என்ற தயக்கம். அவ்வப்போது, ஆன்லைன் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நடக்கும் அளவுக்கு காற்றின் வேகம் குறைந்திருந்தது. புயலின் கண் நம்மைக் கடந்துகொண்டிருக்கிறது, மீண்டும் மற்றுமொரு அடி அடிக்கும் என செய்திகளில் வந்தது. சிறிது பயம்தான், இருந்தாலும் கிளம்பலாம் என்று முடிவாயிற்று.

உடனிருந்த நண்பரை அழைத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினேன். அவரை விட்டுவிட்டு, தனியே பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் சின்ன மற்றும் பெரிய மரங்கள் விழுந்திருந்தன, வருத்தமாக இருந்தது. இவையெல்லாம் அமைய எத்தனை வருடங்கள் எடுத்திருக்கும்? சிலமணி நேரங்களில் அனைத்தும் விழுந்துவிட்டன! பொதுமக்களே மரங்களையெல்லாம் வெட்டி அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். அனகாபுத்தூர் அடையாறு ஆற்றைக் கடந்துதான் வரவேண்டும். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நின்று கவனித்தேன், சில எருமை மாடுகள் தண்ணீரோடு சென்றுகொண்டிருந்தன. எங்கிருந்த மாடுகளோ, எங்கு கரை சேருமோ தெரியவில்லை. இதை மேய்ப்பவர் எப்படி கண்டுபிடிப்பார் அல்லது இலவை இல்லாமல் எப்படி சமாளிப்பார்?

வீட்டிற்கு வந்தால் அடுத்த பிரச்சனை ஆரம்பம். ஞாயிறு இரவு முதலே மின்சாரம் இல்லை, மேல் தொட்டியில் தண்ணீர் இல்லை. அன்று மட்டும் சமாளிப்பதற்கு, வாளிகளில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருந்தது. மொட்டை மாடி சென்று பார்த்தால், வழக்கத்திற்கு மாறாக வானத்தில் பறவைகள் அங்க்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன. இவையெல்லாம் இந்த புயல் காற்றில் எப்படி தப்பிப் பிழைத்தன என ஆச்சர்யமாக இருந்தது.

இரவில் மின்விசிறி அவசியமில்லை, நன்றாகக் குளுகுளுவென்றுதான் இருந்தது. தண்ணீர்தான் பிரச்சனை. அடுத்த தெருவில் ஒரு அடிபம்பு இருந்திருக்கிறது இவ்வளவு நாள் தெரியவில்லை. அந்தத் தெரு வழியே பல தடவைகள் சென்றிருக்கிறேன், இதனை யாரும் கண்டுகொண்டதாக ஞாபகமில்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு. முதல்நாள் ஒருமுறை சென்றுவந்தேன், கூட்டமில்லை. இரண்டாம் நாள் முதல் வரிசை கட்டி தண்ணீர் எடுக்கவேண்டிய நிலைமை. சுற்றியிருக்கும் பல தெருக்களுக்கு அதுதான் ஒரே வரப்பிரசாதம்.

நல்லதண்ணி வாங்கும் வெற்று கேனை வீகோ வண்டியின் முன்னே வைத்துகொண்டு செல்வேன். அங்கே வரும் யாரிடமாவது, ஒரு குடத்தை இரவல் வாங்கி, அதில் அடித்து, கேனை நிரப்பிக்கொள்வேன். நேரடியாக கேனை வைத்து அடிக்க முடியாது. பின்பு, வீட்டிற்கு வந்து இரண்டாவது மாடி வரைக்கும் தூக்கிச் செல்லவேண்டும். இருக்கும் வாளிகளில் ஊற்றிவிட்டு, மீண்டும் செல்லவேண்டும். இப்படியேதான் வியாழன் இரவுவரை சென்றது. புதன் இரவு, அடுத்த தெரு வரைக்கும் வந்துவிட்டது, ஆனால் நமக்கு வரவில்லை. பணம் கொடுத்து, அந்த தெருக்காரர்கள் வேலையை முடித்துவிட்டதாக ஒரு பேச்சு.

நல்லதண்ணீருக்கு அலைந்த கதை தனிக்கதை. வழக்கமாக தண்ணி கேன் போடுபவர், சரியாக ஞாயிறன்று ஊருக்குச்சென்றுவிட்டார். திங்கள் முதல், அருகிலிருக்கும் இன்னொரு கடையில் வாங்கவேண்டிய நிலைமை. வாங்கி, வீட்டிற்குத் தூக்கிச்சென்று ஊற்றிவிட்டு, மீண்டும் கொண்டுவந்து கேனைக் கொடுக்கவேண்டும். அதற்கும் மேலே, வழக்கத்தைவிட பத்து ரூபாய் அதிகம். மின்சாரம் இல்லாததால், ஜனரேட்டர் மூலம் ஓட்டுகிறார்களாம். அப்படியிருந்தும் லேசில் கிடைக்கவில்லை.

வியாழன் காலை அலுவலகம் செல்லும்போது பார்த்தேன், ஒருவரும் வந்து வேலை செய்ததுபோலத் தெரியவில்லை. அன்று மின்சாரம் வரும் என்று நம்பிக்கையில்லை. இரவு திரும்பி வந்தபோது வந்துவிட்டது, சிலர் நடந்த கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். முந்தைய நாள், புதன்கிழமை, ஒரு கூட்டம் சென்று, சாலை மறியல் செய்தார்களாம், அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து அனுப்பினார்கள். வியாழக்கிழமை, ஒரு அம்மா தெரு வழியே, “போஸ்ட் மேன் கம்பில ஏறிட்டாரு, போஸ்ட் மேன் கம்பில ஏறிட்டாரு”, என்று தெரு வழியே, உற்சாகமாக கத்திக்கொண்டே சென்றார், அவ்வளவு எதிர்பார்ப்பு. மக்கள் பரபரப்பாகிவிட்டார்கள். சில பேர், சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். வேலை செய்தவரோ, ஸ்குருடைவர் இல்லை, ஸ்டூல் இல்லை, எடுத்துவருகிறேன் என்று சென்றுவிட்டிருக்கிறார்.

திரும்பி வரவே இல்லை. மீண்டும் ஒரு கூட்டம் சென்று, அவரை அழைத்து வந்திருக்கிறது. இப்போது, அவர் வேலை செய்யும்போது சுற்றி ஒரு பெரிய கூட்டம், “கரண்டு வராம எப்படி போரன்னு பாத்துருவோம்” என்று. அவர் நிலைமை மிகவும் பரிதாபத்துகுறியதாய் இருந்திருக்கவேண்டும் எனத் தோன்றியது. வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார். பணம் எதுவும் வாங்கியதாகத் தெரியவில்லை.

இதனிடையே, தினம் குப்பை எடுக்கவரும் ஊழியர்கள் வரவில்லை. தினமும் ஒரு பையில் போட்டு, வண்டியில் தொங்கவிட்டுக்கொண்டு, ஊருக்கு வெளியே கொண்டு, போட்டுச்செல்வேன். என்னைப்போலவே எங்களது பகுதியில் இன்னொருவர் செய்வதைப் பார்த்திருக்கிறேன். மற்றவரெல்லாம், அருகே இருக்கும் வெற்று இடத்தில் வீசிவிடுகிறார்கள். சில நேரங்களில் நாய் அதை எடுத்துவந்து, தெருக்களிலும், எங்களது கார் பார்க்கிங்கிலும், குதறிப்போட்டுவிடும்.

அதே சமயம், இன்னொரு பிரச்சனை. செல்போன் சிக்னல்கள் எல்லாம், திங்கள் அன்றே காணாமல்போயின. பிஎஸெனல் மற்றும் ஜியோ மட்டும் ஓரளவு வேலை செய்தன. அலுவலகம் வந்து தினமும் போனை சார்ஜ் செய்துகொள்வேன். மேலும், இரு தண்ணீர் பாட்டில்கள் முழுதும் தண்ணீர் அடைத்துச்செல்வேன், வீட்டில் பயன்படுத்த. செல்போனில் பேசுவதில்லை என்பது பெரிய பிரச்சனையில்லை. ஆனால், பணம் இல்லாத இந்த சமயத்தில், டெபிட் அல்லது கிரிடிட் அட்டைகளைதான் பெரும்பாலும் உபயோகித்துகொண்டிருக்கிறேன். இப்போது அதற்கு வந்தது சிக்கல். ஸ்வைப்பிங் மெசின்கள் எல்லாம் இப்போது கம்பியில்லாது, சிம்கார்டுகள் மூலம்தான் வேலை செய்கின்றன. சிக்னல் இல்லாததால் எதுவும் வேலைசெய்யவில்லை. கையிலிருந்த கொஞ்ச நோட்டுக்களையும், இழந்துவிடவேண்டிய சூழ்நிலை.

இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மனதை பாதித்த முக்கியமான இரு விசயங்கள் உண்டு. ஒன்று, அதிக அளவில் மரங்கள் விழுந்தது. அடுத்தது, அடையாறு ஆற்றில் வீணாக ஓடிய தண்ணீர். தினமும் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். மூன்று நாட்களாக தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை, ஆனால் சேமிக்க முடியாமல் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது என்பது வருத்தம்தான்.

-பெஸ்கி.

Leave a Reply