தயக்கம், வியப்பு, உற்சாகம், மழை

Published by: 29

நான் எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ, மூன்று மாதங்களாகப் பதிவர் சந்திப்பே நடைபெறவில்லை. ஒரு வழியாக நேற்று நடந்தது.

சந்திப்பு ஐந்து மணிக்கு, மெரினாவில், காந்தி சிலை முன்பு. நான்கு மணிக்கு கேபிள்ஜி சொன்னபடி பதிவர் வெங்கி ராஜாவை அசோக் பில்லரில் கோர்த்துக்கொண்டு மெரினா நோக்கிச் சென்றேன்.

காந்தி சிலை அடையும்போது மணி 4.45, ஆங்காங்கே மக்கள் கூட்டம். ‘அங்க பாருங்க, கேமராவும் கையுமா நாலு பேரு நிக்கிறாங்க, நம்ம சங்கத்து ஆளுங்களாத்தான் இருக்கும்’, என்றார் வெங்கி. அவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. ஏற்கனவே சிறுகதைப் பட்டறை சென்றிருந்ததால் ஒரு நாலைந்து பேரைத் தெரியும். நம்ம மச்சி அடலேறுவுக்குப் போன் செய்தேன்.
‘சிங்கமே, எங்க இருக்கீங்க?’
‘மச்சி, பீச் கிட்ட இருக்கோம், நானும் நிலாரசிகனும். இங்க வாங்க’
’அஞ்சு மணி ஆகப் போகுதுங்க, ஆரம்பிச்சிரப் போறாங்க’
’அட, 5 மணின்னா ஐ.எஸ்டி.ப்படி கொறஞ்சது 5.30ஆவது ஆகும், இங்க வாங்க’
அவர் சொல்றதும் சரிதான் என்று, கடற்கரையில் சென்று சிறு கூட்டம் ஒன்றைப் போட்டோம்.

நிலாரசிகன், அடலேறு, வெங்கி மூவரும் சில புத்தகங்கள் பற்றியும், பதிவுகள் மற்றும் பதிவர்கள் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டனர். நமக்குத்தான் ஒன்னும் தெரியாதே. பே… என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ’நீ இன்னும் படிக்க வேண்டியது நெறையா இருக்குடா ஏனாஓனா’, ன்னு மனசுல அசரீரி.

நிலாரசிகன் – 2004ல் பிலாக் எழுத ஆரம்பித்தாராம், அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போதெல்லாம் பிலாக் என்றால் என்ன, ஏன் எழுதுகிறோம் என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லையாம். புதிதாய்ப் பதிவு போட்டதும், பழைய பதிவு கீழே சென்றுவிடுவது கண்டு குழம்பிப் போனதை விவரித்தார், சரியான காமெடி.

மழை வரும்போல் இருந்தது. 5.30க்குக் கிளம்பி காந்தி சிலை அருகே சென்றோம். நமக்கோ தயக்கம். மூத்த பதிவர்கள் பலர் நின்றிருந்தனர். கேபிள் சங்கர், நர்சிம், அதிஷா, லக்கிலுக், முரளி கண்ணன் ஆகியோர் தெரிந்திருந்தனர். நம்மையெல்லாம் கண்டுக்குவாங்களோ என்ற சந்தேகத்துடனேயே முதலில் அனுகினேன். ’ஹலோ, நான் எவனோ ஒருவன்’, என்றேன். ‘ஓ, அது நீங்கதானா?’, என்றார்கள் எல்லோரும் சொல்லிவைத்தார்போல. நம்ம பேரு தெரிஞ்சிருக்கே! ஒரு வேளை சும்மா பேச்சுக்கு சொல்றாங்க போல என்றவாறு நின்றிருந்தேன். ரொம்ப நேரம் அருகிலேயே நின்ற ஒருவர் வெகு நேரம் கழித்து அறிமுகம் செய்துகொண்டார்.
நான் சுதந்திர இலவச மென்பொருள்’ என்றார்.
‘ஓ, அது நீங்கதானா?’, இப்போது நான்.

இடையில் ஒருவர் கேட்டார், ’உங்க புரொபைல் போட்டோல உங்க முகம் சரியா தெரியலிங்க, போட்டவ மாத்திருங்களேன்’. நான் ‘சரியா தெரியக்கூடாதுன்னுதான் அத வச்சிருக்கேன்’, என்றேன். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியவில்லை. அடி விழவில்லை என்பது மட்டும் உறுதி.

வித்தியாசமான அனுபவம். பின்னூட்டத்திலேயே பேசிக்கொண்டிருந்த மிகவும் தெரிந்த, பிடித்த ஒருவர் நமக்கு அருகிலேயே இருப்பார். தயங்கித் தயங்கி அறிமுகமானால், ‘ஓ, அது நீங்கதானா?’தான் எல்லோரிடமிருந்தும் வந்தது, நம்மிடமும்தான். அதிலும் கே.ரவிசங்கர், இவரா அவர் என்றிருந்தது. காரணம் அவரது அனுபவம் அப்படி. பின்னூட்டத்தில், ’நன்றிமச்சான்’ என இவரிடம் சொன்னது நினைத்து சிரிப்புத்தான் வந்தது. முதன் முதலில் இப்படிப் பார்ப்பது மிகச் சிறந்த அனுபவம். நமது கற்பனையில் ஒருவருடைய உருவம் ஒருவாறு இருக்கும், நேரில் பார்த்தால்?! பதிவர்கள் வந்துதான் பாருங்களேன்.

கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம் விலகியது, மேகங்கள்தான் கூடிக்கொண்டிருந்தன. ஊர்சுற்றி, டம்பி மேவீ, ஜனா, சரவணன் ஆகியோர் அறிமுகம் பகிர்ந்துகொண்டனர். பின்பு, தண்டோரா, வண்ணத்துப்பூச்சி சூர்யா, அகநாழிகை வாசுதேவன், வளர்மதி ஆகியோர் ஏதோ மணம் சூழ வந்து கலந்தனர். பைத்தியக்காரன் வந்தார், உற்சாகமூட்டுவதில் இவரைப் போல் வராது, தும்மினால் கூட ‘நல்லா தும்முறீங்க’ என்று கட்டிப்பிடித்துப் பாராட்டும் நல்லமனம் கொண்டவர்.

ஒரு வழியாக கதகதைப்பு அடங்கி, அனைவரும் அமர்ந்தனர், அமர வைக்கப்பட்டனர். முரளி கண்ணன் பேசத் தொடங்கினார். ‘இங்கு வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்’. அவ்வளவுதான், கிழிந்தது வானம், கொட்டோ கொட்டென்று கொட்டியது. அனைவரும் அருகிலிருக்கும் மரத்தடியில் தஞ்சம் புகுந்தோம். ‘முரளி கண்ணனை ராம்நாடு பக்கம் அனுப்பி வைங்கய்யா…’ கூட்டத்தில் யாரோ சொன்னது.

கொஞ்ச நேரத்தில் மழை நிற்கவே, மறுபடி கூடினோம், மீண்டும் ஆரம்பித்தார் முரளி கண்ணன். முதலில் சிலருக்கு வாழ்த்துக்கள். பின், புதியவர்களுக்கு வரவேற்பு. புதியவர்கள் ஒவ்வொருவராக முன்னே வந்து அறிமுகம் செய்துகொள்ள அழைக்கப்பட்டனர். வெங்கி ராஜா, ஜனா, நான், நிலா ரசிகன், டம்பி மேவீ, ஊர்சுற்றி, அடலேறு, அமுதா கிருஷ்ணா… பின்னால் நின்று விசிலடித்து, கைதட்டி உற்சாகமூட்டும் பணியை அதிஷாவும், முன்னால் நின்று புதியவர்களை ராகிங் செய்யும் பணியைக் கேபிள்ஜியும் கண்ணும் கருத்துமாகச் செய்தனர். பின் தண்டோரா, அகநாழிகை வாசுதேவன்… பின் சரவணன் – இவர் ஆரம்பித்ததும் முன்பை விட நல்ல மழை. இவர் மற்றும் முரளி கண்ணன் இருவர் பற்றியும் வீரத்தளபதி அறிந்தால் ராம்நாடுக்குக் கடத்தப்படும் வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மீண்டும் மரத்தடி, ஒதுங்கியும் பிரயோஜனம் இல்லை. முழுவதும் நனைத்தது மழை. பின்பு, டோண்டு ராகவன், சுகுணாதிவாகர் மற்றும் ஆதி ஆகியோர் தனித்தனியே வந்து சேர்ந்தனர்.

டோண்டு அவர்களுக்கு கடலில் கால் நனைக்க அலாதி பிரியம் போல! யாராவது கூட வருவார்களா என அழைத்துப் பார்த்தார். ஒருவரும் உடன் செல்லாததால் தனியே சென்று வந்தார்.

ஆதி ஹெல்மட்டுக்குள் ஒரு டிபன் பாக்ஸ் வைத்திருந்தார். ஏதோ சாப்பிட இருக்குமென்று, ’என்னண்ணே அது’, என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ‘ஒன்னுமில்ல சும்மா’, என விரைவாய் மறைத்துக்கொண்டார். ஒரு வேளை, இவர் காமன் மேனாகி, டிபன்பாக்ஸ் குண்டு ஏதும் கொண்டு செல்கிறாரோ என்று நமக்கு சந்தேகம் எழுந்ததற்கும், உ.போ.ஒ.க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்.

மரத்தடியிலேயே ஆங்காங்கே கதைப்புகள் நடந்தன. மழை வெறித்ததும் அனைவரும் டீக்கடை நோக்கிச் சென்றனர். நாம் ஸ்பெசல் டீக்கடைக்குச் சென்றுவிட்டபடியால் அங்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. பின்பு டாக்டர்.புருனோ வந்ததாகவும், உ.போ.ஒ., கந்தசாமி, லினக்ஸ், ரத்த தானம், புதிய தலைமுறை (இதழ்) ஆகியவை பற்றி பேச்சுகள் நடந்ததாகவும், அடுத்த முறை சந்திப்பு கூரைக்கடியில் இருக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டுமென்று பேசியதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை இந்த சந்திப்பு சிறிது ஏமாற்றமே அளித்தது, காரணம் மழை. விரும்பிய சிலருடன் சரியாகப் பேச இயலவில்லை, சில பேர் பெயர்களை இங்கு விட்டுவிட்டேன். ஆதலால், சென்னையில் கூரைக்கடியில் கூடுமாறு ஏதும் இடம் இருக்கிறதா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

-ஏனாஓனா.

Thank you for reading. 🙂

29 comments

  1. Cable சங்கர்

    /அட.. அப்துல்லாவும் வந்திருந்தார். கேபிள்ஜிக்கு வயசாக வயசாக ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டு போகிறது!//

    அவங்க எல்லாம் வந்தாங்க.. ஆனா வரல்.. நீங்க எங்க பாத்தீங்கன்னு தெரியும் தலைவரே..:)

  2. Beski

    நன்றி கேபிள்ஜி.

    வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி லக்கி.
    //யுவகிருஷ்ணா said…
    வயசாக வயசாக ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டு போகிறது!//
    :)))

    //Cable Sankar said…
    அவங்க எல்லாம் வந்தாங்க.. ஆனா வரல்.. நீங்க எங்க பாத்தீங்கன்னு தெரியும் தலைவரே..:)//
    :))))

  3. அகநாழிகை

    பெஸ்கி,
    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ரசிச்சு படிச்சேன்.

    //பைத்தியக்காரன் வந்தார், உற்சாகமூட்டுவதில் இவரைப் போல் வராது, தும்மினால் கூட ‘நல்லா தும்முறீங்க’ என்று கட்டிப்பிடித்துப் பாராட்டும் நல்லமனம் கொண்டவர்.//

    அருமை.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

  4. Anonymous

    பாக்கறத அப்படியே பதிவு செய்ற மாபி, பாராட்டத்தக்க வேண்டிய ஒன்று, நிறைய பேருக்கு அது வாய்பதில்லை நான் உட்பட.

  5. butterfly Surya

    //பைத்தியக்காரன் வந்தார், உற்சாகமூட்டுவதில் இவரைப் போல் வராது, தும்மினால் கூட ‘நல்லா தும்முறீங்க’ என்று கட்டிப்பிடித்துப் பாராட்டும் நல்லமனம் கொண்டவர்.//

    hahaha,.. super.. உண்மை….

    நல்லா எழுதி இருக்கீங்க பெஸ்கி.

    ரசித்தேன்.

  6. Beski

    //"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said…
    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ரசிச்சு படிச்சேன்.//
    நன்றி வாசுதேவன்.

    //கிறுக்கல் கிறுக்கன் said…
    தம்பி நான் கோபமாயிருக்கேன்//
    விடுங்க கிகி, அடுத்த தடவை பாத்துக்கலாம்.

    // ☀நான் ஆதவன்☀ said…
    ரொம்ப நாள் ஆசை நிரைவேறிடுச்சு போல :)//
    அதே.
    //படிக்க சுவாரஸியமாக இருந்தது மாப்பி//
    நன்றி மாப்பி.

    //அமுதா கிருஷ்ணா said…
    ஓ உங்களை பார்த்து தான் அவனா நீ?? என்று அடிக்கடி சொல்லிட்டு இருந்தாங்களா..//
    சீரியசான ஆளுன்னு நினைச்சேன், உங்களுக்கு நக்கலும் வருமோ? நம்ம சங்கத்துல உறுப்பினராகுறதுக்கு உங்களுக்கு தகுதி இருக்குன்னு நினைக்கிறேன்.

    //அடுத்த முறையாவது மழை இல்லாமல் இருக்கட்டும்…//
    மழை வரட்டும் (ஏற்கனவே நம்ம ஏரியால தண்ணிப் பிரச்சனைங்க), ஆனா நம்ம இடத்தை மாத்திடுவோம்.
    வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா.

  7. Beski

    //தண்டோரா …… said…
    அடப்பாவி…அவ்வளவுதானா?//
    தலைவா, எல்லாத்தையுமா எழுதச் சொல்றீங்க? இந்தப் பதிவையே இரண்டு இடங்களில் தணிக்கை செய்தேன்.

    பதிவுலகில் பொடியன் அல்லவா, இப்போதைக்கு கொஞ்சம் அடக்கியே வாசிப்போம், போகப் போக பொளந்து கட்டலாம் என்றிருக்கிறேன்.

    வருகைக்கு நன்றி தண்டோரா.
    (அப்புறம் அந்தப் படத்தில் டெர்ரரா இருக்குறது நீங்கதானா?)

  8. Beski

    // butterfly Surya said…
    hahaha,.. super.. உண்மை….//
    ஹி ஹி ஹி, நீங்களுமா?

    //நல்லா எழுதி இருக்கீங்க பெஸ்கி.
    ரசித்தேன்.//
    நன்றி சூர்யா.

  9. Beski

    //adaleru said…
    பாக்கறத அப்படியே பதிவு செய்ற மாபி, பாராட்டத்தக்க வேண்டிய ஒன்று, நிறைய பேருக்கு அது வாய்பதில்லை நான் உட்பட.//

    நன்றி அடலேறு. அப்படியே இதுல பிக்கப் பண்ணிக்கலாம்கிற? ஓக்கே.

  10. Anonymous

    அப்படி இல்ல எசமான், இதுலயே நீங்க கலக்கறிங்கனா மத்ததுல கலக்கு கலக்குன்னு கலக்கலாம் அத தான் சொன்ன நண்பா
    குறிப்பு : பின்னுட்டம் சோடா கலக்குவது பற்றி அல்ல

  11. Beski

    //adaleru said…
    அப்படி இல்ல எசமான், இதுலயே நீங்க கலக்கறிங்கனா மத்ததுல கலக்கு கலக்குன்னு கலக்கலாம் அத தான் சொன்ன நண்பா//
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே…

    //குறிப்பு : பின்னுட்டம் சோடா கலக்குவது பற்றி அல்ல//
    அது சரிதான். எனக்கு சோடா கலக்கத் தெரியாது, கலக்குவது பிடிக்காது என்பது எனது வட்டாரத்திற்குத் தெரியும்.

  12. Jana

    ம்ம்ம்…நல்லதொரு பதிவு…உண்மையில் பலபேருடன் பேசமுடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் மனதுக்குள் இருக்கு. விரைவில் மீண்டும் சந்திக்கவேண்டும்.

  13. Beski

    //Jana said…
    ம்ம்ம்…நல்லதொரு பதிவு…//
    நன்றி ஜனா.

    //உண்மையில் பலபேருடன் பேசமுடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் மனதுக்குள் இருக்கு. விரைவில் மீண்டும் சந்திக்கவேண்டும்.//
    கண்டிப்பாக சந்திப்போம். தாங்கள் பேசுவதைக் கேட்பதற்காகவே சந்திக்க வேண்டும்.

  14. Beski

    நன்றி வசந்த்.

    வாங்க ராஜராஜன், உங்க பேரை விட்டுட்டேன் பாத்தீங்களா? அடுத்த தடவை இப்படியெல்லாம் நடக்காது.

    நன்றி வால்.

  15. Venkatesh Kumaravel

    அன்னைக்கே பார்த்து பின்னூட்டம் போட மறந்துட்டேன்! பதிவு ஜூப்பர் பாஸு!
    //*வெங்கி ராஜா*, ஜனா, நான், நிலா ரசிகன், டம்பி மேவீ, ஊர்சுற்றி, அடலேறு, அமுதா கிருஷ்ணா…//
    நான் போவல தல.. அறிமுகமெல்லாம் செய்துக்கல…

  16. Beski

    //வெங்கிராஜா | Venkiraja said…
    அன்னைக்கே பார்த்து பின்னூட்டம் போட மறந்துட்டேன்! பதிவு ஜூப்பர் பாஸு!//
    நன்றி வெங்கி.

    //நான் போவல தல.. அறிமுகமெல்லாம் செய்துக்கல…//
    ஓ அப்படியா? சரியா ஞாபமில்லை, எழுதிவிட்டேன்.
    பரவாயில்லை, அடுத்த தடவை இது உண்மையாகும்.

  17. ஷங்கி

    நல்ல அருமையான விவரணை ஏனா ஓனா! டோண்டு அவர்களுக்கு நீங்க சரியான போட்டியா இருப்பீங்க! இந்த தடவை அவரு இடுகை போட்ட மாதிரி தெரியலை! உங்களுக்குத்தான் பரிசு.

  18. Beski

    //ஷங்கி said…
    நல்ல அருமையான விவரணை ஏனா ஓனா! //
    நன்றி அண்ணே.

    //டோண்டு அவர்களுக்கு நீங்க சரியான போட்டியா இருப்பீங்க! இந்த தடவை அவரு இடுகை போட்ட மாதிரி தெரியலை! உங்களுக்குத்தான் பரிசு.//
    அவர் மழை காரணமாக தாமதமாகத்தான் வந்தார், வந்ததும் மழை விட்டபடியால் அனைவரும் கிளம்பிவிட்டோம். அதனால்தான் அவர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அடுத்த முறை அவரும் எழுதும் பட்சத்தில் பார்க்கலாம்.

Leave a Reply