பிளாக் எப்போ, எப்படி படிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கு மறந்தே விட்டது. ஆனால் முதல் முதலில் படித்தது டோண்டு பதிவுகளைத்தான். அங்கு கிடைத்த லிங்குகளை வைத்து பதிவு உலகம் என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்து கொண்டான். படிக்கப் படிக்க ஆர்வம் அதிகமாகியதே தவிர குறைந்தது இல்லை. பொது அறிவு, நாட்டு நடப்பு, எண்ணங்கள், வாதங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறை இப்படி பரந்து விரிந்து கிடக்கும் பதிவுலகம் அவனை சுலபமாக தனதாக்கிக்கொண்டது. பொதுவாக இவ்வுலகம் இவனுக்கு பிடிப்பதற்கு காரணம், பெரும்பாலான எண்ணங்கள் இவனுடன் ஒத்துப்போவதே. இந்த எழுத்துலகில் தனக்கென ஒரு இடம் காத்திருப்பதை அவன் உணர்வுகள் எப்போதும் அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு முறையும் பதிவர் சந்திப்பு நடக்கும்போது எப்படியாவது சென்றுவிட வேண்டும் என அவன் நினைப்பதுண்டு. ஏதேனும் ஒரு காரணம் முளைத்துவிடும்; வழக்கம்போல். முயற்ச்சியைத் தொடங்குவதில் எப்போதுமே அவனுக்கு ஒரு தயக்கம் உண்டு; அந்த நேரங்களில் வாய்ப்பை காரணம் தாண்டிவிடும். ஆனால் எப்போதாவது ஒருமுறை காரணத்தை வாய்ப்பு முந்தினால், அதன்பின் அது தொடர்பான மற்ற வாய்ப்புகளுக்கு வேறு எந்த காரணமும் முளைக்க முடியாது. பதிவர் கூட்டம் ஒரு சிறந்த நட்பு வட்டமாக, குடும்பம் போல தோன்றுவதால் அடுத்த கூட்டத்திற்காக காத்துக்கொண்டிருந்தான். அந்த நட்பு வட்டத்தை ஏற்றத்தாழ்வற்ற, எதையும் எதிர்பாராத ஒன்றாகவே அவன் நினைத்தான்.
ஆனால்…
இன்று பார்த்த செய்தி அந்த எண்ணத்தில் தொய்வு விழச் செய்துவிட்டது.
வாங்க இலவசமாக உலகத் திரைப்படங்களைப் பார்க்கலாம்
உலக சினிமா… பதிவர்கள் பார்க்க ஏற்பாடு! உலக சினிமாக்களைத் தேடி, பிடித்தோ, இறக்கியோ, பார்த்து, பகிர்ந்து, பல சிடிக்களாக சேமித்து அடுக்கி வைக்கும் பழக்கமிருந்த அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி; நீடிக்கவில்லை. பதிவர்களுக்கு மட்டும் அனுமதி, படிப்பவர்களுக்கு அல்ல. அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. பின்னூட்டங்களின் காரணங்கள் ஏதும் உள்ளதா என தேடினான். இடப்பற்றாக்குறை… பதிவெழுதத் தூண்டுதல்… சப்பைக் காரணங்கள். அப்போ, பதிவு எழுதுபவர்களும், படிப்பவர்களும் ஒரே வட்டம் இல்லையா? அவனுடைய குடும்பம் கூடும்போது, இடம் இல்லை என்று யாரையும் ஒதுக்கலாமா என்று அவனால் நினைக்கக் கூட முடியாது. நண்பர்கள் கூடும்போது இப்படி யாராவது நினைப்பார்களா? பொது இடத்தில் கூட்டம் என்றால் ‘அனைவரும் தயங்காமல் வருக!’ என்று கூறுவது, மனமார்ந்த அழைப்பாகத் தெரிந்த அவனுக்கு, இப்போது அவை சந்தர்ப்பவாத வார்த்தைகளாகவே தெரிகின்றன.
இந்த எண்ணங்கள் சந்திப்புகளுக்கு செல்வதற்க்கான தடைக் காரணங்களில் ஒன்றைக் கூட்டியதே தவிர, அவனுடைய எழுத வேண்டும் என்ற எண்ணங்களை ஒன்றும் செய்யவில்லை.
ஏனெனில்…
இதோ எழுத ஆரம்பித்துவிட்டான்.
அவர்களின் பதிவெழுதத் தூண்டுதல் முயற்சியில் இன்னுமொரு பதிவர்.
🙂 welcome
வலை உலகிற்கு புதிதாய் வந்தமைக்கு வாழ்த்துக்கள் கூறிக்கொள்கின்றேன்.
அடுத்து உலக சினிமா பார்வை என்பது வெறும் பதிவர்களுக்கான முயற்சி என்று கூறப்படுதல் ஒரு அந்நியத்தன்மையை உங்களிடத்தில் உண்டாக்கியிருப்பது சற்று அதிகப்படியான வருத்தம் தருகிறது.
எனினும் உங்களின் சந்தர்ப்பவாத புரிதல்கள் நிச்சயம் மிகைப்படுத்தப்பட்டவையாகத்தான் எனக்கு படுகிறது. காரணம் இதைப்பற்றிய கருத்துக்களை நீங்கள் அங்கு கூட பின்னூட்டி தங்களின் தார்மீகக்கோபத்தை காட்டியிருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
எனினும் தங்களின் கருத்துக்களுக்கு நன்றி..
//அவர்களின் பதிவெழுதத் தூண்டுதல் முயற்சியில் இன்னுமொரு பதிவர்.//
பார்த்துக்குங்கப்பா. இவரும் ரவுடிதான் :-))))
வாழ்த்துக்கள் நண்பா வருக வருக.. வந்து ஊடுகட்டி அடிக்க வாழ்த்துக்கள்
->முத்துலெட்சுமி
நன்றி.
தங்களுடைய புரொபைலில் நிரைய பிளாக்குகள் இருக்கின்றன, எது எனக்குப் பிடித்தமானது எனத் தெரியவில்லை, அனைத்தையும் பார்க்கிறேன்.
->சென்ஷி
நன்றி.
தங்கள் பெயரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் உங்களுடைய பதிவுகளை பார்ப்பதில்லை, இப்போது கூகுள் ரீடரில் சேர்த்துவிட்டேன்.
இப்போது உங்கள் கருத்துக்களுக்கு வரலாம்.
உண்மையிலேயே வருத்தம்தான்; நான் இந்த பதிவர் வட்டத்தைப் பற்றி கொஞ்சம் ஓவரா எதிர்பார்த்துவிட்டேன் போல இருக்கிறது. இதே போல ஆர்வத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு பதிவைப் போட்டுவிட்டு வந்து நின்றால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
அடுத்து; இப்படி பின்னூட்டம் வரும் என்று நிச்சயம் நினைக்கவில்லை. இப்போதுதான் தமிழ் டைப் திக்கித் திக்கி அடிக்கப் பழகுகிறேன். நன்றாக பழகியபின் வெளிக்காட்டலாம் என்றிருந்தேன்; இன்னும் நிறைய பிளாக் பற்றி கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. தமிழ்மணம், திரட்டி தளங்களில் சேர்ப்பதற்கு முயன்றேன்; தகவல்கள் எல்லாம் தமிழில் இருப்பதால் சரியாகப் புரியவில்லை; அப்படியே விட்டுவிட்டேன். எங்கிருந்து இங்கு வந்தீர்கள் என்று புரியவில்லை.
எனக்கே என் மீது ‘நீ நல்லாதாண்டா எழுதுற‘ அப்டினு ஒரு நம்பிக்கை வந்த அப்புறம் பின்னூட்டமெல்லாம் போட்டுத் தாக்கலாமேங்கிறது என் எண்ணம். எதிர் கருத்து சொல்றதுக்கு இன்னும் தகுதியும், நம்பிக்கையும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அப்புறம், தார்மீக கோபம் என்றால் என்ன என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.
->அதிஷா
நன்றி.
தங்களுடைய வாசகன் நான்; தங்களுடைய பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.