செல்லாக் காசு

Published by: 0

rupee-2000-notes

நாள்: டிசம்பர் 20, 2016

நவம்பர் 8ம் தேதி (8/11), இந்த நாள் வரை மட்டுமே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும். நாளை முதல் செல்லாது என, நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்கள் அறிவித்தார். அன்று இரவு, தாமதமாகத்தான் வீட்டுற்கு வந்தேன். வாட்ஸாப்பில் முதலில் ஒரு செய்தி இது பற்றி… நம்பவில்லை. வழக்கம்போல புரளியாக இருக்குமென்று நினைத்தேன். மீண்டும் அதே செய்தி பலரிடமிருந்து வந்தவுடன் புரிந்துகொண்டேன்.

மறுநாள் அலுவலகம் வரும்போது வழியில் சில வங்கிகளில் பயங்கரமான கூட்டம். அலுவலகம் வந்தால் இதே பேச்சு. வீட்டில் 500 ரூபாய் நோட்டுகள் கணிசமாக இருந்தன. அவற்றை மாற்றுவதுதான் சிரமமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் சிலருக்கும் பணம் கொடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்ப்பவருக்கு, மோட்டார் பழுது பார்த்தவருக்கு… ஆனால் ஏ டி எம் ல் பணம் எடுக்க முடியாது, குறைவாகத்தான் வரும். வேறு வழி இல்லை, கையில் இருக்கும் பணத்தை மாற்றியாகவேண்டும், ஒன்றிரண்டு முறையாக, மிச்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

டிசம்பர் 31 வரை பழைய நோட்டுகளை மாற்றவும்/டெபாசிட் செய்யவும் முடியும். ஒரு முறை, ஒரு நபருக்கு 4000 ரூபாய் மட்டும் மாற்றுவதற்கு அனுமதி. டெபாசிட் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், ஆனால் அதிகமாக செய்தல் பின்னால் விசாரணை இருக்குமெனப் பேச்சு. முதல் வாரம் பயங்கரமான கூட்டம். கூட்டம் குறைந்தவுடன் மெதுவாகச் செல்லலாம் என்று காத்திருந்தேன். ஆனால் கூட்டம்தான் குறைந்தபாடில்லை.

சனிக்கிழமை காலை பம்மல் மற்றும் அனகாபுத்தூர் சுற்றிருக்கும் ஏ டி எம் எல்லாம் சென்று பார்த்தேன். ஒன்றிலும் பணமில்லை. சில ஏ டி எம் கதவுகள் அடைத்தே கிடக்கின்றன, நல்ல விஷயம்தான், இதற்காக நிறுத்தி, சோதனை செய்ய அவசியம் இல்லை. இதே போல பணமில்லாத இடங்களைப் பூட்டி வைப்பதே நல்லது எனத் தோன்றியது. (இன்று அனைத்தும் மூடி இருக்கின்றன). சனி மதியம் அசோக் பில்லர் அருகே, கோடக் ஏ டி எம் ல் பணம் கிடைத்தது, ஒரு வாரம் பிரச்சனை இல்லை.

முதலில் வந்த அறிவிப்புகளில் சில மாற்றங்கள் வந்தன. அதில் ஒன்று, ஒரு நபர் 2000 மட்டுமே மாற்றிக்கொள்ளலாம் என்பது. அதுதான் அவநம்பிக்கை ஆரம்பித்த தினம். மெதுவாக மாற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்ததெல்லாம் வீண். கையிலிருக்கும் பணத்தையெல்லாம் சீக்கிரம் மாற்றனும் அல்லது டெபாசிட் செய்யணும். நாளை என்ன அறிவிப்பு வருமோ என்ன மாறுமோ! (இதன் பிறகு பல மாறுதல்கள் வந்தன, கடைசியாக இப்போது – ஒருவர் 5000 க்கு மேலே ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்)

அலுவலகம் வரும் வழியில் ஒரு SBI வங்கி உண்டு. வெகு நாட்களுக்குப் பிறகு வாங்கிக்குச் செல்வதால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதுவும் தனியார் என்றாலும் பரவாயில்லை. காலை 10 மணிக்கு உள்ளே சென்றேன். டோக்கன் 45. அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் விசாரித்தேன், முடிந்த வரை என்னை வேறு ஏதாவதொரு கிளைக்கோ அல்லது வங்கிக்கோ அனுப்புவதையே குறிக்கோளாக வழிகாட்டினார். “2000 ரூபாதான் மாத்த முடியும், உங்க பிராஞ்சுக்கு போய் டெபாசிட் பண்ணுங்க, செக் போட்டு 24000 எடுத்துக்குங்க”, என்றார். இதுக்கு எதுக்கு என்னோட கிளைக்குப் போகணும்!

எனக்கு வேற வழி இல்லை, அவசரமா வேணும்னு சொல்லி விண்ணப்பத்தை வாங்கினேன். ஒரு சில விஷயங்களில் அந்த வாங்கி பரவாயில்லை. 50 பேருக்கும் மேலே இருந்தது, வரிசையில் நிற்க வேண்டாம், டோக்கன் எடுத்துவிட்டு, கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்துகொள்ளலாம். சிலர் நின்றுகொண்டு இருந்தனர். பணம் மாற்றாச் சென்ற ஒருவர் சரியான ஐடி இல்லாததால் திரும்பிச் சென்றார். சிலர், செக் கொடுத்து 24000 வாங்கிச்சென்றனர். சிலர் மேலாளர் அறையருகே எதற்கோ நின்றுகொண்டிருந்தனர். ஒரு மணி நேரம், எனது முறை வந்தது. ஆதார் காண்பித்து 2000 மாற்றிக்கொண்டேன்.

அடுத்த சனிக்கிழமை அலுவலகம் செல்லவேண்டியிருந்தது. எங்ககளது கட்டடத்திலேயே, தரை தளத்தில் ஒரு HDFC வங்கியும், ஒரு ICICI வங்கியும் மற்றும் அதனதன் ATM களும் இருக்கின்றன. எதேட்சையாக அந்தப்பக்கம் சென்றேன், கூட்டம் குறைவாய் இருந்தது. விசாரித்ததில், பணம் போடலாம், செக் மூலம் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் 2000 தாள்களாகத்தான் இருக்கின்றனவாம். அதனால்தான் கூட்டம் இல்லை (இப்போது 2000 இருந்தாலும் பரவாயில்லை குடுங்க, என்றாலும் கிடைப்பதில்லை). கையில் இருக்கும் பணத்தை எல்லாம் வங்கிக்கணக்கில் அடைத்தாயிற்று. சிறிது 2000 தாள்களையும் வாங்கியாயிற்று.

இப்போது அடுத்த அசைன்மென்ட், 2000 தாள்களை மாற்ற வேண்டும். இதற்கும் சில வழிகளைப் பிடித்தாயிற்று. வாலிபர்களுக்கான மருந்துக்கடைகளில், சில்லறை தாராளமாகக் கிடைத்தது. ஒரு முறை நூறு ரூபாய்களாகவும், ஒரு முறை 10 ரூபாய்களாகவும்! ஆனால் ஏதாவது வாங்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்தில், காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் கொடுத்தது உதவியது, பக்கத்து நாடார் கடைதான். ஒரு அட்டையைக் கொடுத்து, வாங்கும்போதெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள், பணம் இருக்கும்போது கொடுங்கள் என்றார்கள். இப்போது 500 க்கும் மேல் வந்தபின், 2000 கொடுத்தால், சில்லரை கிடைத்துவிடும். மேலும் சில கடைகள் இருக்கின்றன, குறிப்பிட்ட தொகைக்குமேலே வாங்கினால், 2000க்கு சில்லறை கிடைக்கும்.

நவம்பர் வரை எதுவும் பிரச்சனையாகத் தெரியவில்லை. டிசம்பர் முதல் வாரம் கூட அப்படித்தான். அதன்பிறகு வங்கிகளில் பணம் இல்லை. 9.30 மணி வங்கிக்கு 9 மணியிலிருந்தே வரிசை. அப்படியும் 10000 ரூபாய்தான் தருகிறார்கள். பணம் குறையக் குறைய, அதுவும் குறைகிறது. கடைசியாக இருப்பவருக்கு 2000 தான். அதன்பின் இருக்கும் 5 பேருக்கு ATM ல் முதல் வாய்ப்பு, இப்படி விதவிதமாக திட்டங்கள்.

ATM ல் பணமே இல்லை. தினம் இந்த நேரம்தான் நிரப்புவார்கள் என்ற கணிப்புடன் 30 பேர் நிற்கிறார்கள். டிசம்பர் முதல் வாரம், அரை மணி நேரத்தில் இரண்டு ATM களில் 3 அட்டைகளை வைத்து பணம் எடுத்தோம். இப்போது வாய்ப்பே இல்லை. அவ்வளவு கூட்டம். சில்லரையும் சரியாக்க கிடைப்பதில்லை. இந்த மாதம் சமாளித்துவிடலாம். அடுத்த மாதம்தான் என்ன ஆகுமென்று தெரியவில்லை. நிலைமை இன்னும் மோசமாகலாம், அல்லது சரியாக்கலாம், 500 ரூபாய் நோட்டுகள் வந்தால்தான் தெரியும்.

-பெஸ்கி.

Leave a Reply