சென்ற முறை பார்பிக்கூ நேசன் சென்றிருந்தோம், அது டீம் அவுட்டிங், முழுச் செலவும் கம்பெனிதான். அங்கேயும் இதே கதைதான். மேசையின் நடுவே ஒரு பெரிய சதுர ஓட்டை இருக்கும். சென்று அமர்ந்த கொஞ்ச நேரத்தில் ஒரு தனல் அடுப்பைக் கொண்டுவந்து அதில் பொருத்திவிடுவார்கள். அதன் பிறகு கம்பியில் சொருகிய சிக்கன், மட்டன், கடல் உணவு வகைகள், காய்கறிகள் என அதன் மேலே அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். சாப்பிட ஒரு வயிறு பத்தாது. ஆனால், ஒரு வசதி. கொஞ்சம் பீரோ, அல்லது ஜாக் டேனியல்ஸ் போன்று சரக்கோ ஆர்டர் செய்து, சிறிது சிறிதாகக் குடித்துக்கொண்டே சாப்பிடலாம். கம்பியில் ஐட்டங்கள் வருவது மட்டுமின்றி அவ்வப்போது லெக் பீஸ் மற்றும் நண்டு போன்ற ஐட்டங்களும் வந்து தட்டை நிறைக்கும். இந்த ஸ்ட்டாட்டர்கள் போதும் என்று நினைத்தால் நமது மேசையில் இருக்கும் கொடியைக் கவிழ்த்துவிடவேண்டும். அதன்பிறகு ஸ்டாட்டர்கள் அடுக்குவதை நிறுத்திவிடுவார்கள்.
அதன் பிறகுதான் மெயின் கோர்சாம், அது பஃப்பெ. ஒரு தட்டை எடுத்துக்கொண்டு அடுக்கியிருக்கும் ஐட்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு வந்து கொட்டிக்கவேண்டும். சரக்கு தொட்டிருக்காத சமயம் வரிசையாக வரும். முதலில் கொஞ்சம் காய்கறி, சூப். பின்பு கொஞ்சம் ஸ்டாட்டர், அடுத்த ரவுண்டுக்கு பிரியாணி அல்லது சோறு, பிறகு தயிர்சாதம், கடைசியில் டெஸ்ஸர்ட். ஆனால் அன்று கொரோனா கொஞ்சம் வேலையைக் காட்டியது. ஒரே முறைதான், அனைத்து ஐட்டங்களும் தட்டில்.
மீதமான புலாவை என்ன செய்வது என்பது போல எதிரே இருந்தவன் பார்த்தான். அவன்தான் ஆர்டர் செய்தது, எதுவும் திட்டுவேனோ எனப் பார்த்தான். பார்சல் செய்யச்சொல், யாராவது பிச்சைகாரனைப் பார்த்தால் கொடுத்துவிடலாம் என்று சொன்னேன். ஆச்சர்யமாகப் பார்த்தான், எங்கள் ஊரில் இப்படித்தான் செய்வோம் என்றேன். மதிய உணவு அப்படியாக முடிந்தது.
தினமும் காலையில் அப்டேட் கால் இருக்கும். அன்று காலை இதைச் சொன்னேன். முந்தைய தினம் செய்ய வேண்டிய வேலைகளையும் இன்று முடித்துவிடுவேன் என்று. கல்கத்தாக்காரன் சொன்னான், இன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று. நான் கெத்தாகச் சொன்னேன், நாளை என்றால் நாளை நாளை என்று போய்க்கொண்டே இருக்கும், நாம் இன்றே முடிக்கவேண்டும் என்று. இப்படித்தான் அவ்வப்போது பில்டப்புகளைக் கொடுத்து கெத்தை மெயிண்டெய்ன் செய்துகொண்டிருக்கிறேன்.
அதற்கு முந்தைய நாள், நான் ரிபோர்ட் செய்த ஒரு டிக்கட்டுக்கு பேட்ச் ஒர்க் கொடுத்து சோதிக்கக் கேட்டிருந்தார் ஒருத்தர். ஆனால் அன்று வேறு ஒரு வேலை இருந்ததால் அதைச் செய்ய முடியவில்லை. இன்றும் அதே வேலைதான் போய்க்கொண்டிருக்கிறது. முடித்தவுடன் பேட்ச் ஒர்க்கை சரிபார்த்து சொல்லவேண்டும்.
மதியம் வரை ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. இன்னொரு அலுவலக நண்பர் ஒருவர் யூஸ்ட் கார் ஒன்று பார்த்து வைத்திருந்தார். வோல்ஸ்வேகன் போலோ, 2011 மாடல், 24 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியிருந்தது. 3.8 லட்சத்திற்கு முடித்திருக்கிறார். மறுநாள் சனிக்கிழமை சென்று எடுத்துவரலாம் என்றிருபதாகக் காலையில் சொன்னார், நண்பருக்குச் சொந்த ஊர் ஊட்டி. அவரிடமிருந்து ஒரு விசயம் அறிந்தேன். அவர் கன்னடம் பேசுவார், ஆனால் பெங்களூர் கன்னடத்தை விட கொஞ்சம் வித்தியாசப்படும், ஆனால் இவர் புரிந்துகொள்வார். முன்பொரு காலத்தில் கர்நாடகத்திலிருந்து ஒரு கூட்டம் ஊட்டியில் சென்று செட்டிலானதாம். இவர் அந்த பரம்பரையில் வந்தவர். இவர்கள் பேசுவது பழைய கன்னடமாம்.
சாப்பிடும்போது யாரோ அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள், வெள்ளிக்கிழமை நல்ல நாளாம், இன்றே எடுத்தால் நன்றாக இருக்குமாம். இவர் அதெல்லாம் பார்ப்பதில்லை, ஆனால் நண்பரோ இன்றே எடுங்கள் என்றிருப்பதால் அந்தக் கார் ஓனரிடம் கேட்டிருக்கிறார். அவரும் ஓக்கே சொன்னபடியால் என்னிடம் வந்தார். காரில் சென்று எடுத்து வரலாம் என்றார். வேலை ஒரு பக்கம், நண்பர் ஒரு பக்கம். சரி நட்புதான் முக்கியம், வந்து வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பியாயிற்று.
நான், ஊட்டி நண்பர், உடன் கார் பற்றி நன்கு தெரிந்த இன்னொரு நண்பர். இவர்தான் திரும்ப ஓட்டி வரவேண்டும். இது எனக்குப் பிறகுதான் தெரியும். ஊட்டி நண்பர் நன்றாக ஓட்டுவார் என நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் கார் வாங்கிய புதிதில் இவர்தான் டிகிளட்ச் பற்றி சொன்னார். பெங்களூரில் சாலை மேடு பள்ளமாக இருக்கும். மேட்டில் நிற்கும்போது கார் பின்னால் நகராமல் எடுக்கவேண்டும். நமக்கு நேர் ரோட்டிலேயே ஓட்டத் தெரியாது. ஒரு வழியாக திக்கித் திணறி ஓரளவு சமாளிக்கிறேன். அதனால்தான் கேட்டேன், ”நீங்கதானங்க எனக்கு இதெல்லாம் எப்படி செய்யனும்னு சொன்னீங்க” என்று. அவர் சிம்பிளாகச் சொன்னார் “சொல்றது ரொம்ப ஈசிங்க”.
சரி, மூன்று பேர் சேர்த்தாயிற்று. திரும்பி வரும்போது இரண்டு கார், நான் தனியா வரனுமே என்று இன்னொருத்தருடைய வேலையைக் கெடுத்து அவரையும் காருக்குள் இழுத்துப்போட்டாச்சு. இவர் புதுக்கோட்டைக்காரர். சென்ற வாரம்தான் காருக்கு லைசன்ஸ் எடுத்தார், இவரும் ஒரு பழைய கார் வாங்கலாமெனப் பார்க்கிறார். இவர் லைசன்ஸ் எடுத்த கதை தனிக்கதை. ஏஜெண்ட் மூலம் போகாமல் தனியே சென்றிருக்கிறார். இன்ஸ்பெக்டர் இவரை மட்டும் படுத்தி எடுத்துவிட்டாராம். நன்றாக கார் ஓட்டத்தெரிந்தவர் சென்னைக்காரர். இவர் சில வருடங்களாக கார் வைத்திருக்கிறார், கார் பற்றிய சந்தேகங்களுக்கு நான் இவரைத்தான் நம்பியிருக்கிறேன். நல்ல மனிதர், இவர்தான் எனக்கும் காரை சோரூமிலிருந்து எடுத்து வீட்டில் கொண்டுவந்து விட்டவர்.
மாலை 6 மணிக்குள் திரும்பவேண்டும். வேலை ஒரு பக்கம் இருந்தாலும், பெங்களூர் டிராபிக் அப்படி. முழி பிதுங்கி முட்டியில் வந்து விழுந்துவிடும். கார் ஓனர் வீடு இங்கிருந்து தூரம். நாங்கள் இருப்பது குண்டலஹல்லி. போக வேண்டியது ஜே.பி.நகர். சில்க் போர்ட் தாண்டித்தான் போகவேண்டும். அது மட்டும்தான் கொஞ்சம் பெரிய சிக்னல், ஓசூர் ரோடு குறுக்கே செல்லும்.
ஓனர் வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் அந்த ஏரியாவில் இரண்டு சிறிய ஏரியாக்களை சுற்றிப் பார்த்தாயிற்று. பின்பு ஒரு வழியாக அவரது வீட்டை அடைந்தோம். சும்மா சொல்லக்கூடாது, மிக மிக நல்ல மனிதர். காரில் பாதி டேங்க் பெட்ரோல் இருந்தது. கார் கவர் மேலும் சில பொருட்கள் எல்லா கொடுத்தார். பெயர் மாற்றத் தேவையான அனைத்தையும் விசாரித்து அனைத்து ஃபார்ம்களையும் கையெழுத்திட்டு வைத்திருந்தார். சொந்த ஊர் மைசூராம், சென்னையில் படித்தவர். தமிழ் நன்றாகப் பேசுகிறார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறாராம். கிட்டத்தட்ட வீட்டிலிருந்த அனைத்தையும் வெப்சைட்டுகளில் ஏற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு சார்ப் டிவி, சோபா செட், ஃப்ரிட்ஜ் அனைத்தையும் காட்டினார். ஒரு கட்டில் கூட இருந்தது. கார் சாவியெல்லாம் கொடுத்து, கிளம்பும்போது இருங்க இருங்க என்றார். வீட்டிற்குள் ஓடிச்சென்று டேஸ்போர்டு கிளீனர் ஸ்பிரே ஒன்றை எடுத்து வந்தார், கொடுக்க மறந்துவிட்டாராம். நினைத்துக்கொண்டேன், நமது கார் டேஸ்போர்டு கிளீனாகிவிடுமென்று. பக்கா ஜெண்டில்மேன்.
ஊட்டி நண்பர் இதற்கு முன்பு பார்த்த காரின் ஓனர் கூட பக்கா ஜெண்டில்மேன்தான், அவர்தான் சொன்னார். அதுவும் போலோ கார்தான். சிவப்பு கலர். 5 ஆயிரம் கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. அந்த ஓனர் கார் வாங்கியதோடு சரி, ஓட்டவேயில்லை போலிருக்கிறது. ஆனால் நல்ல காசு பார்டியாம், இன்னும் இரண்டு கார்கள் இருக்கின்றனவாம். இதை எதற்கு விற்கிறார் தெரியுமா? வேறொரு கார் வாங்கப் போகிறாராமாம். காரைப் பார்த்ததும் நண்பருக்குப் பிடித்துப்போய் அட்வான்ஸ் எவ்வளவு குடுக்கட்டும் என்றிருக்கிறார். நம்ம ஜெண்டில்மேன் ”அதெல்லாம் வேணாம் தம்பி, கார் உங்களுக்குத்தான், நான் சொன்னா சொன்னதுதான்”, என்றெல்லாம் “ஒரு நாக்கு ஒரு வாக்கு” ரேஞ்சுக்குப் பேசி அனுப்பிவிட்டார். மறுநாள் பணத்துடன் சென்றபோது ”மன்னிக்கனும் தம்பி, என் மக என்கிட்ட கேக்காம இன்னோருத்தர்கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டா” என்றிருக்கிறார் ஜெண்டில்மேன்.
ஊட்டி நண்பர் என்னை ஓட்டச்சொன்னார். பரவாயில்லை, நான் எனது காரிலேயே வருகிறேன் என்று சென்னை நண்பரை ஓட்டச்சொன்னேன். நானும் புதுக்கோட்டை நண்பரும் எனது காரில். ஒருவழியாக சில்க் போர்டை மீண்டும் கடந்து வந்தாயிற்று. மணி 6 நெருங்கியிருந்தது. ஊட்டி நண்பர், புது கார் ஓனர் இதற்கு மேல் எதற்கு ஆபீஸ் என வழியில் சரக்கு வாங்கும் கடையில் இறங்கிக்கொண்டார், வாங்கிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிடுவார். என்னை கட்டாயம் திரும்பி பார்டியில் வந்து கலந்துகொள்ளனும் என்றார். மறுப்பேதும் இல்லை. வழக்கமாகவே வெள்ளி இரவு அவரது வீட்டில் ஒரு சந்திப்பு இருக்கும். அன்று சிறப்புச் சந்திப்பு.
மற்ற இருவருடன் ஆபீஸ் சென்றேன். பாதி வழியிலேயே தூரல் ஆரம்பித்துவிட்டது. ஆபீஸ் சென்று வேலையை முடிக்கும் குறிக்கோளுடன் அமர்ந்தேன். சரியாக அப்போது இருவர் வந்து சில சந்தேகங்கள் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அப்படியே சிறிது நேரம் சென்றது. மேனேஜர் வேறு, போன தடவை அமெரிக்கா சென்றபோது வாங்கி வந்த சரக்கை இப்போது கொண்டுவந்து கொடுத்து, ஊட்டி நண்பரிடம் கொடுக்கச் சொன்னார். உடனே கிளம்ப முடியாது, வேலையை ஒரு நிலை வரை முடித்து வைத்துவிட்டு ஊட்டி நண்பருக்கு கால் செய்தேன்.
ரிங் அடிக்கும்போதே நினைத்தேன், எத்தனை ரவுண்டு ஓடியிருக்குமோ என்று. எடுத்ததும் சொன்னார், இன்னும் வீட்டிற்கே செல்லவில்லையாம். அடை மழை, ரோட்டில் வெள்ளமாக தண்ணீர், நடக்கக் கூட முடியாத நிலை, வழியில் ஒரு கடையில் ஒதுங்கி நிற்கிறேன், வரும்போது ஏற்றிக்கொள்ளுங்கள் என்றார். ஆச்சர்யம். பெங்களூரில் இதுவரை தண்ணீர் தேங்கி நான் பார்த்ததே இல்லை. அதுவும் நடக்கமுடியாத அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது என்றால் பயங்கர மழையாகத்தான் இருக்கவேண்டும். அவசரமாகக் கிளம்பினேன், அப்போதே மணி 8 நெருங்கிவிட்டது, வீட்டிற்கு 10 மணிக்குள் செல்லவேண்டும்.
காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, ஓரளவுக்கு மழை குறைந்திருந்தது. ஆனால் சாலையெங்கும் தண்ணீர் நன்றாக ஓடிக்கொண்டிருண்டது, சாலை தெரியவேயில்லை. மெதுவாக முன்னே சென்ற லாரிக்குப் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தேன். வைப்பர் மெதுவாக இயங்கிக்கொண்டிருண்டது. நேரம் செல்லச்செல்ல கண்ணாடியில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. கொஞ்ச தூரம் வந்தபோதுதான் தெரிந்தது, கண்ணாடியின் உள்பக்கம் ஏதோ பனி போலப் படர்ந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. டிஃபாக்கர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், தெரிந்தவரை, ஏசி சிவிட்சை அப்படி இப்படி திருப்பிச் சரிசெய்ய முயற்சி செய்தேன். மெதுவாகக் கார் நகர்ந்துகொண்டிருந்தது. சில வாகனக்கள் உடன் வந்துகொண்டிருந்தன.
ஒரு நிலையில் கண்ணாடி முழுவதும் படர்ந்துவிட்டது பனி. ஒன்றுமே தெரியவில்லை எந்தக் கண்ணாடி வழியாகப் பார்த்தாலும். ஓரமாக நிறுத்தலாமென முயற்சி செய்தேன். அதற்கும் ஏதாவது தெரியவேண்டுமே. ஒரு வழியாக மெயின் ரோட்டிலிருந்து இடதுபக்கம் செல்லும் சாலை ஒன்றில் திருப்பி ஓரமாக நிறுத்தினேன். ஏதேதோ செய்து கண்ணாடியைச் சரிசெய்ய முயற்சி செய்தேன், வெற்றி. கொஞ்சம் கொஞ்சமாக பனி குறந்தது. அது சரியாகவும், மழை விடவும் சரியாக இருந்தது.
இதே போன்றதொரு சூழ்நிலை, வண்டி வாங்கிய புதிதில் நடந்தது. நமது சக பதிவர் கிகி.தான் லைட்டு எப்படிப் போடவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார். வலதுபக்கம் இருந்த குச்சியைப் பற்றிச் சொன்னவர், இடது பக்கம் இருந்த குச்சியைப் பற்றிச் சொல்லவில்லை. அது வைப்பருக்கானது. ஒருநாள் கிருஷ்ணகிரி அருகே இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன், மனைவி மற்றும் மகளுடன். ஓசூர் தாண்டு பெங்களூர் நெருங்கும் நேரம், மழை ஆரம்பித்துவிட்டது. வைப்பர் எப்படி ஆன் செய்வது என்று தெரியவில்லை. இடது பக்கம் இருக்கும் அந்தக் குச்சியை வலது குச்சி போன்றே அசைத்துப் பார்த்தேன், ஒன்றும் வேலைக்காகவில்லை. ஒரூ வழியாக பின்னாடி இழுத்தால் வேலை செய்யும் என்பதைக் கண்டுகொண்டேன். அதேபோன்றுதான் இன்று புதிதாக ஒன்றைப் படித்துக்கொண்டேன்.
மழை விட்டவுடன், மீண்டும் மெயின் ரோட்டில் சேர்ந்துகொண்டேன். மழை விட்டபடியால் டிராபிக் மொய்த்தது. ஊட்டி நண்பருக்குப் போன் செய்தேன், அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார். நானும் அவரது வீட்டிற்குச் சென்று ரோட்டோரமாக வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றேன். வழக்கம்போல பவர்கட். எங்களது ஏரியாவில் இது ஒரு பிரச்சனை, தூரல் ஆரம்பித்தாலே கரண்ட் இருக்காது. மழை விட்டு மரம் எல்லாம் காய்ந்தால்தான் மீண்டும் பவர் வரும். எப்படி இவ்வளவு பெரிய சிட்டியில் இப்படி மொக்கைத் தனமான அமைப்புடன் இயங்குகிறது எனத் தெரியவில்லை.
ஏற்கனவே அவர் ஒரு ஃபுல் வாங்கியிருந்தார், இதில் மேனேஜர் கொடுத்த ஃபுல் வெறு இருந்தது. சரி, இன்று மேனேஜர் கொடுத்ததை அடிப்போம் என முடிவானது. ஏதோ ஒரு பெயர் போட்டிருந்தது, ஸ்காட்ச் விஸ்கி, 10 இயர்ஸ் ஓல்டாம். திறந்தவுடன் அப்படி ஒரு நாத்தம், சாரி சாரி, வாசம், ஆனால் திறந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன். அப்படியே ஸ்பிரிட்டின் வாசம். ஒரு ரவுண்டு அடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
வழக்கமாக கோடைஸ்தான் அடிப்போம். ஒரு ஃபுல் 200 ரூபாய், ரம். பெங்களூர் குளிருக்கு அருமையாக இருக்கும். மூனாவது ரவுண்டில் ஜெர்கின் இல்லாமல் மொட்டைமாடிக்குச் சென்று தம் அடிப்பேன். ஆனால் இது வித்தியாசமாக இருந்தது. ஒரு ரவுண்டு முடித்தவுடன் ஏறியது போலவும் கொஞ்சம், ஏறாதது போலவும் கொஞ்சம். சரியென அடுத்த ரவுண்டு சென்றோம். முடித்தவுடன் மீண்டும் ஏறி ஏறாமல். எனக்கு நேரமாகிவிட்டதால் கிளம்பிவிட்டேன்.
வாசலில் வந்து ஒரு தம். மழை பெய்துகொண்டே இருந்தது, கிளம்பினேன், காரைப் பின்னால் எடுக்கும்போது மரத்தில் முட்டியதாக ஞாபகம். மெதுவாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன், பத்து மணி. இப்போதெல்லாம் என்ன ஆனாலும் பத்து மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடத்தோன்றுகிறது. எனது குழந்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணயர்ந்து தூங்குவதைப் பார்ப்பதற்காகவே சீக்கிரம் வருகிறேன். இந்த மழை, மழையுடன் கொஞ்சம் போதை, முடிவில் ஒரு ஆஃப் பாயில், பின்பு கண்ணயரும்போது ஒரு தம்முடன் கொஞ்சம் உளறல். எவ்வளவு பார்த்திருப்பேன். அதையெல்லாம் விட இந்த அழகியல் போதைக்காக எதையும் இழக்கத் தயார்.
-பெஸ்கி.
//ஆனால், கொஞ்சம் சரக்கு உள்ளே சென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த உணவகத்தில் ஆல்ககால் அனுமதி கிடையாது.//
ரொம்ப கஷ்ட்டம்தான்