நான், அட்டக்கத்தி மற்றும் சில

Published by: 7

Madhubaanakadai.jpg
வழக்கமாக தமிழ்ப் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. தேவையில்லாமல் நூறு ரூபாயையும், மூன்று மணி நேரத்தையும் வீணடிக்கும் அளவுக்கு வேலை இல்லாமல் இல்லாததால், தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே சென்று பார்ப்பேன். சமீப காலமாக நிறைய தம்ழ்ப்படங்களைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. நல்லதுதான்.
இவைதான் சமீபத்தில் பார்த்த படங்கள்.


உதயம் காம்ப்லக்ஸில் பார்த்தேன். மிகச் சிறிய படம். ஆங்காங்கே சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தாலும், முழுதும் லயித்துப் பார்க்க முடியவில்லை. அடியில், சீட்டின் அழுத்தம் அடிக்கடி தெரிந்தது. இந்தப் படத்தில் முக்கியமாக எனக்குப்படுவது, பல விசயங்களை பார்வையாளனின் கற்பனைக்கே விட்டுவிடுவது. பல இடங்களில் விளக்கங்கள் எதுவும் இல்லாமல் புரிவது போன்ற உணர்வு. அது கடந்து போகும்போது நமது மூளை வேறு எங்கோ சென்று வந்துவிடுகிறது. இது போன்று பல ஆங்கிலப் படங்களில் உணர்ந்திருக்கிறேன். இந்தப் படம் கவரவில்லை என்றாலும், இயக்குனரின் அடுத்த படத்தை எதிர்பார்க்கிறேன்.

காசி தியேட்டர். எதிர்பார்க்காத அனுபவத்தைக் கொடுத்த படம். நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள், ஆனாலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் சென்றேன். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான படம். நண்பனின் சாவு நிகழ்ந்த கட்டம் மட்டும் கொஞ்சம் இழுவையோ என நினைக்கத்தோன்றியது. ஆனால் படம் முடியும்போது அந்தக் காட்சியும் தேவையான காட்சிதான் என்று தோன்றியது. சில பாடல்கள், பார்க்கும்போது மட்டும்தான் மனது துள்ளும் – மக்காயாலா – இந்த வருடத்தின் சிறந்த பாடல்களில் ஒன்றாக அமையும். திரைக்கதையைப் பற்றியெல்லாம் சொல்ல ஒன்றும் இல்லை, காப்பி என்று கேள்விப்பட்டேன். ஆனால், படம் அருமையான படம். திரையரங்கில் கூட்டமே இல்லை.

மீண்டும் உதயம். அரங்கு நிறைந்த காட்சி. வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்னச் சம்பவங்கள்தான். ஆனால் சரியாகக் கோர்த்துப் பார்க்கும்போது ஒரு கதை போலத் தோன்றும். தனித்தனியே பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் சிறந்த விசயமாகப்படுவது – கதாப்பாத்திரங்கள். கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்ல, ஒவ்வொரு கதாப்பாத்திரமும் திரையில் இதற்கு முன் பார்க்காத முகங்கள், நிஜமாக நடந்த சம்பவங்களைப் போன்ற அனுபவத்தைத் தந்த நடிப்பு, அருமை. இசையைப் பற்றிக் கண்டிப்பாக சொல்லவேண்டும். கானாவும் அருமை, மென்மையான அந்த ”ஆசை ஓர் புல்வெளியும்” அருமை. வெகு நாட்களாக இந்தப் பாடல்களை ஆங்காங்கே கேட்டிருக்கிறேன். ஏதாவது பெயர் தெரியாத படம் வந்து போயிருக்கும் என நினைத்துக்கொள்வேன். ஆனால், பாடல் வந்த பிறகு, வெகு நாட்கள் கழித்து வந்த படம் போலிருக்கிறது. ஏனோ வாலி நினைவுகள் மனதிற்குள்.

ஆக்சன் அதிரடிக்கு உத்தரவாதம். மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக கதைக்குள் வந்து, அதிரடி தூள் கிளப்பும் படம். அனைத்து கணக்குகளையும் ஹார்ட் டிஸ்க்கில் வைத்திருக்கும் இந்தக் காலத்தில், யாராவது அதைத் தெரிந்துகொள்ளும் வழி இருக்கிறது, போலீஸோ, எதிரியோ அல்லது அசாஞ்சே போன்றவர்களோ. இதற்கு மாற்றுவழி வைத்திருக்கிறான் ஒரு கொள்ளைக்கூட்டத் தலைவன். இதற்கு மேல் வேண்டாம்.

இந்தப் படத்தைப் பார்த்ததே தனிக்கதை. ஆன்லைனில் முன்பதிவு துவங்கியவுடனேயே டிக்கட் எடுத்தேன். அவசரத்தில், சனிக்கிழமை எடுப்பதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை எடுத்துவிட்டேன். பின்பு, பரவாயில்லை என்று சனிக்கிழமை காலைக்கு ஒரு டிக்கட் எடுத்தேன். வெள்ளிக்கிழமை டிக்கட்டை நண்பர் ஒருவரிடம் கொடுத்து உபயோகித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டேன்.

சனிக்கிழமை காலை எழுந்து கொஞ்ச நேரம் ப்ளஸ்ஸில், கொஞ்ச நேரம் புதிய தலைமுறை டிவியில் என நேரத்தைப் போக்கினேன். வழக்கமாக கமலாவில் காலைக் காட்சி 11.30 க்குத்தான் பார்ப்பேன். பத்து மணிக்கு மேல்தான் கவனித்தேன், படம் 10.30 க்கு. அதன்பின் குளித்து, கிளம்பிப் போவதற்குள் படம் ஆரம்பித்துவிடும். நமக்கு முதலில் இருந்து பார்க்காவிட்டால் படம் பார்த்த திருப்தியே இருக்காது. முதல் காட்சிகளைப் பார்ப்பதற்காகவே திரும்பவும் போகத்தோன்றும். நேற்று ஒரு நண்பர் வேறு, படம் மரண மொக்கை, அந்தப் பக்கம் போக வேண்டாமென சொல்லியிருந்தார். சரி, பார்க்கவேண்டாமெ முடிவெடுத்து இருந்துவிட்டேன்.

அதன்பின் அண்ணன் ஜாக்கியின் ஒரு ப்ளஸ் பார்த்தேன். அடுத்தவர் சொல்வதால் ஒரு படத்தைப் பார்க்காமல் இருப்பது சரியில்லை, நமக்கென்று ஒரு கண்ணோட்டம் இருக்கும் என அவர் சொல்வது சரியென்று தோன்றியது. மீண்டும், மூன்றாவது முறையாக கமலாவில் 1.30க்கு ஒரு டிக்கட் எடுத்தேன். எந்தத் தடங்களும் இல்லாமல் சென்றுவிட்டேன். இதை விடக் கொஞ்சம்தான் அதிகம், படத்தில் சுவாரஸ்யம்.

படம் எனக்கு மரண மொக்கையாக எல்லாம் தோன்றவில்லை. ஆனால், வழக்கமாக மிஷ்கின் படம் பார்த்த திருப்தி இல்லை. மிஷ்கினைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாதவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். படத்தில் எதையோ இயக்குனர் தொலைத்துவிட்டார், ஏதோ ஒரு உணர்வை நமக்குள் விதைக்க நினைத்த இயக்குனர், அதற்கான காட்சிகளில் எதையோ இணைக்க மறந்துவிட்டார் என நினைக்கிறேன். அல்லது இதைப் பற்றி நினைக்காமலேயே இருந்திருக்கலாம், அல்லது தெரியாமல். இயக்குனர் தோற்றுவிட்டார் என்பது மட்டும் உறுதி.

இந்தப் படங்களில், திரும்பப் பார்க்க நினைக்கும் படம், ”நான்”.

-பெஸ்கி.

Thank you for reading. 🙂

7 comments

  1. CS. Mohan Kumar

    நண்பா, சென்னை பதிவர் சந்திப்பில் நீங்களும் முக்கிய பங்காற்றியிருந்தாலும், அது பற்றி தாங்கள் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லையே ஏன்? :))

  2. Beski

    நன்றி மோகன்குமார்.

    பதிவர் சந்திப்பில் முக்கியப் பங்கு என்பதெல்லாம் அதிகம். நானும் பங்காற்றினேன்.

    விழா நன்றாக நடந்தது, எனக்கு எதுவும் குறையாகவோ, தவறாகவோ தெரியவில்லை. மற்றவர்கள் சொன்ன கருத்துக்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். முடிவாக எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

  3. Beski

    அய்யய்யோ,
    பிரபல பதிவர் ஒருத்தர் கோபப்பட்டுட்டாரே… இங்க எத்தன தல உருளப்போகுதோ தெரியலயே!

Leave a Reply