நேற்று தென்மேற்குப் பருவக்காற்று பார்க்கச் சென்றிருந்தேன். பதிவர் வண்ணத்துப்பூச்சி சூர்யா அழைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக் காட்சி என்றும், பதிவர்களை அழைத்திருப்பதாகவும் சொன்னார். Four Frames எனது அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் வசதியாகப் போயிற்று. கிளம்பும் வேளையில் தூறல் ஆரம்பித்தது. இருந்தாலும் படம் பார்க்கும் ஆர்வத்திலும், பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும் கிளம்பிவிட்டேன். பலர் தூறல் காரணமாக வரவில்லை. இருப்பினும், பிரபல பதிவர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜாக்கிசேகர், சூர்யா, காவேரி கணேஷ், சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட சுரேகா ஆகியோர் வந்திருந்தனர். மற்ற அனைவரும் பத்திரிக்கையாளர்கள் என்று நினைக்கிறேன், எனக்கு யாரையும் தெரியவில்லை. சூர்யாதான் ஒவ்வொருவர் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.
டைட்டில் சாங் அருமை. பாடல் மட்டுமல்ல, காட்சிகளும்தான். “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே…”, கிராமத்து தாய்மார்களின் ஸ்டில் படங்களுடன் வந்தது அருமையாகவும் வித்தியசமாகவும் இருந்தது. அது முதலே திரை முழுவதும் தேனி மாவட்டத்தில் செந்நிறம். அந்த நிறமே என்னை கிராமத்தில் இருப்பது போன்று உணர்வைத் தந்தது. பல தாய்மார்களின் படங்களுடன் கடைசியில் படத்தின் முதல் நாயகி சரண்யாவின் படத்துடன் பாடல் முடிகிறது. பாடலும் படங்களுமே இது ஒரு அம்மாவைப் பற்றிய படம் என்பதைச் சொல்லியது.
படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரம் கலங்கிப் போனேன். மிக மிக நாடகத்தனமான காட்சிகள், ஒன்றுக்கொன்று ஒட்டாத காட்சிகள். தெரியாத்தனமா வந்துட்டோமோ என்று எனக்கு பயம். இருந்தாலும் அந்த பயம் போனதே தெரியாமல் காட்சிகளைக் கொண்டுசென்றிருப்பது ஆச்சர்யம்.
இளம் வயதிலேயே விதவையான தாய், தனது மகனைப் பாடுபட்டு வளர்க்கிறாள். மகன் மீது அவ்வளவு பாசம். மகன் வழக்கம்போல வெட்டியாக ஊர் சுற்றும் பிள்ளையாக இல்லாமல், ஆடு மேய்த்துக்கொண்டும் சிறிது சேட்டை செய்துகொண்டும் இருக்கிறான். பூச்சில்லாமல் செங்கல் சுவருடன் நிற்கும் வீடு. அதை மகன் கல்யாணத்திற்காக வாங்கும் பணத்தில் பூசி விடலாம் என்ற எண்ணம் அம்மாவுக்கு. தனது தூரத்து உறவில் அம்மா இல்லாத பெண்ணுக்குப் பேசி வைக்கிறாள்.
ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. படம் ஆரம்பிப்பதே ஆடு திருவதில்தான். வெயில் பட ஆரம்பம்போல ஒரு உணர்வு. அந்த கும்பல் ஒரு முறை நமது கதாநாயகன் பாதுகாக்கும் ஆட்டு மந்தையில் திருடுகிறது. இருவர் குழுவுக்குமான சண்டையில் கதாநாயகன் கும்பலில் ஒருவரைப் பிடித்துவிட, மறைப்பை விலக்கி முகத்தைப் பார்த்தால் பெண், கதாநாயகி. அதிர்ச்சியில் உறைந்துபோன நாயகன் அவளை விட்டுவிடுகிறான். இந்த நேரத்தில்தான் வழக்கம்போல காதல் வந்து நுழைகிறது.
இவளை அவன் தேட, அதே சமயம் அவளுடைய அடிதடி அண்ணன்கள் இவனைக் குறிவைக்க, பின்பு அண்ணன்கள் சிறைக்குச் செல்ல, பின்பு இவர்களுக்குள் காதல் வளர, பேசி வைத்த கல்யாணம் நிற்க, அன்னை மகனின் காதலை எதிர்க்க, வெளிவரும் அண்ணன்மார்களும் நாயகன்மேல் கொலைவெறியுடன் எதிர்க்க, திருட்டுக் கல்யாணத்திற்கு நாயகன் ஏற்பாடு செய்ய, கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.
படத்தின் சிறப்பம்சங்கள் பல. அதிலும் கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் தேர்வும் அவர்களின் நடிப்பும். முதலில் அம்மா சரண்யா. சில காட்சிகள் மூலம் அருமையாக அவரது குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வெகுளி, மகன் மீதுள்ள பாசம், உழைப்பு, கோபம் என ஒவ்வொன்றும் நமக்குப் புரியவைக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயன், கதாநாயகி கதாப்பாத்திரங்களும் அழகாகப் பொருந்திப்போகின்றன. கதாநாயகனின் நண்பன் கதாப்பாத்திரம் அருமையோ அருமை, நகைச்சுவைக்காக. பல இடங்களில் அவனின் வசனங்கள் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கின்றன. கதாநாயகியின் அண்ணனும் டெர்ரராக நமது மனதில் இடம் பிடிக்கிறார். சில காட்சிகள் வந்தாலும் அந்த பெண் போலீஸ் அதிகாரி கூட மனதில் ஒட்டிக்கொள்கிறார். கதாநாயகனுக்காக முதலில் பேசி முடிக்கப்படும் பெண், என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள், அவளது பேச்சு அருமை அருமை… இன்னும் மனதில் நிற்கிறது. அவளிடைய அப்பாவும் மனதில் நிற்கிறார். கதாப்பாத்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் சிறந்த படமாக இது எனக்குப் பிடித்திருக்கிறது.
ஒளிப்பதிவு அருமை, முன்பே சொன்னதுபோல கரிசல் நிறம் திரை முழுதும் அழகாக விரிக்கப்பட்டிருக்கிறது. சிலப்பல பிற நாட்டுப் படங்களைத் திருடிப் படம் எடுக்கும் சூழலில் இப்படி சொந்த சரக்கை அளித்திருப்பது மகிழ்ச்சி. இசை அருமை, கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மற்றும் ஏடி கள்ளச்சி மனதில் நிற்கிறது. இன்னொரு பாடல் அருமையாக இருந்தாலும், ரிதம் படத்தின் தனியே தன்னந்தனியே பாடலின் தழுவலாக இருப்பதால் பிடிக்காமல் போயிற்று.
கற்பனையாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகள் ஒன்றும் படத்தில் கிடையாது. மற்றும் தேவையில்லாத குத்துப்பாடல்களும் கிடையாது. இயக்குனருக்கு இதற்காக மிகப்பெரிய நன்றி. மேலும் இப்போது வரும் பல கிராமத்துப் படங்கள் பருத்திவீரனையோ அல்லது சுப்ரமணியபுரத்தையோ ஞாபகப்படுத்துவதாகவே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அப்படியில்லாமல் இருப்பது இயக்குனர் மேல் மேலும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இனி வரும் கிராமத்துப் படங்களில் சில இந்தப் படத்தை ஞாபகப்’படுத்தலாம்’.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் படத்தின் பலங்களாகக் கருதலாம். படத்தின் பெரும் குறைகளாக நான் கருதுவது, முதலில் வரும் அந்த நாடகத்தனமான காட்சிகள். பெரும் அயர்ச்சியையும் பயத்தையும் தருகின்றன. அடுத்து சில கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள். வாயசைப்பு ஒரு விதமாகவும் வசனங்கள் வேறு விதமாகவும் இருக்கின்றன, அதுவும் க்ளோசப் காட்சிகளில். ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வைப் பல இடங்களில் தருகின்றன. அடுத்து சில லாஜிக் ஓட்டைகள். இப்படி இந்தப் படத்தில் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள் சரி சமமாக இருக்கின்றன. ஆனால் அருமையான காட்சிகளுக்காகவும், கதாப்பாத்திர வடிவமைப்புகளுக்காகவும், சினிமாத்தனமில்லாத சிறந்த முடிவுக்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
-பெஸ்கி.
திரையிடல் வருகைக்கு நன்றி பெஸ்கி. நிறைய பேரை அழைத்தேன் 🙁
நீயாவது வந்தது மகிழ்ச்சியே.
ரேணிகுண்டாவில் “டப்பா”வாக வந்தவர் இதிலும் நகைச்சுவையில் மின்னுகிறார்.
”இந்த மேட்டருக்கு சுப்ரமணிய சுவாமி என்ன சொல்றார்” என்ற வசனம் கலக்க்ல.
பகிர்விற்கும் நன்றி.
விமர்சனத்திற்கு மிக்க நன்றி பெஸ்கி..!
நன்றி சூர்யா.
நகைச்சுவையில் எனக்குப் பிடித்த இடம் – அவன் ஏன் ஒத்தக்கால்ல நிக்கிறான் தெரியுமா?…
நன்றி உண்மைத்தமிழன்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.